மொட்டை மாடியில் உலாத்தியபடி
அலைபேசியில் மணிக்கணக்கில்
கதைப்பவனை – படுக்கையறையில்
வைத்திருக்கிறாள் கீச்சிடும்
ஓர் ஆப்பிரிக்க கிளியாக்கி.
வெண்பூக்கள் தலை நிறைய உதிர
வேம்படியில் காத்திருப்பவன்
இப்போது வரவேற்பறை மேசையில்
உடலெங்கும் பிங்க் பூக்கள் பூத்திருக்கும்
காக்டஸ் தொட்டிச் செடி.
புல்லட் வண்டியில்
அரைக்கால் சட்டையுடன்
பல ஊர்கள் பயணிக்கும்
நவீன யாத்ரீக காதலன்
ஞாபக மறதி கொண்ட
தங்க மீனாக
உருள் வடிவ ஜாடியில்
இலக்கின்றிச் சதா சுற்றிபடி.
பணியிடத்தில் கள்ளமாய்ச் சிரித்து
காஃபிக்கு அழைத்தவனைச்
சாட்டின் இரவுடை போல்
மெத்தென்ற உடல் கொண்ட
பூனையாக மாற்றி விட
அது அவள் கால்களை உரசியபடி
தன் கால்களை நக்கிக் கொண்டிருக்கிறது.
திருமண வலைத்தள
சுயவிவரப் பக்கத்தில்
அவள் ஜீவகாருண்யத்தை மெச்சி
நேசித்து மணந்தவனை
இன்னமும் அவனாகவே
வைத்திருக்க நேர்ந்தது குறித்து
மிகுந்த குழப்பம் இருக்கிறது
அவளிடம்.
No comments:
Post a Comment