Tuesday, May 5, 2026

காசி

எரியும் நகரம்

வயோதிகத்தில் அந்தகனாயிருந்த தகப்பனுக்குப்

போகுமிடங்களை விவரித்தபடி

நகருக்குள் நுழையும் மகன்

சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்தபடி சொல்கிறான்

ஒரு பலிமிருகம் உதிரமொழுக

எல்லா இடங்களிலும் ஓடியது போல்

நல்ல சிவப்பு இந்த நகரின் நிறம் என.

அந்தகன் ஆம் என்கிறான் பதட்டத்துடன்

இருட்டான அவன் உலகத்தில்

உக்கிரமும் தீவிரமும் செறிந்த நகரின் ஆன்மா

செவ்வொளி பெருகித் தகிக்கச் செய்வதைக் கண்டபடி.

வேகமாய் நதிக்குள் பாய்ந்து

கழுத்தளவு நீரில் நின்றபடி

கைகள் உயர்த்திக் கூவுகிறான்

ஏ…..பாகீரதி…..!

இந்த ஸ்ரவண மாதத்தில்

உன் கரைகளில் நிற்கும்

தீக்கொன்றை மரங்களையும்

ருது கொள்ளச் செய்து விடாதே

ஏற்கனவே தாள முடியவில்லை

இந்த நகரின் வெம்மையை….! என.

 

டமரு

திரிசூலத்தின் கூர்முனைகளில் நிற்கும்

இந்நகரம் – சதா அதிர்ந்து கொண்டிருப்பது

இரத்தம் கொதிநிலை அடையச் செய்திடும்

ஒரேயொரு ஆதி இசைக்கு தானே!

பம் பம் பம் பம் டம டம டம் டம டம டம் 

அண்டங்கள் ஜனித்து மோதிடும்

இப்பேரோசையின் தாளத்திற்கு

இடைவிடாது நில்லாது ஆடும் இவ்வுடலை

இப்போதே துறந்து விடுவது

மிக நல்லது இல்லையா... ?!

என

ஏதேதோ பிதற்றுகிறாய்

கேடகி மலரே....!

தாழம்பூவே... !

 

ஒன்றும் அறிகிலேன் யான்.

நானோ….

சிவனின் வலிய கை – இறுகப் பற்றியிருக்கும்

பேரானந்தத்தில்

எதையும் உணராது மயங்கியிருக்கும்

இடை குறுகிய சிறு உடுக்கை அன்றோ....!!

 

காசியின் பசுக்கள்

வேறெங்கும் நிகழ்வது போலவே

இங்கும் தெருக்களோரம் மேய்கின்றன

காசியின் பசுக்கள்.

புனிதப் பசுவின் சடலமொன்று

கண்கள் திறந்தவாறு

புனித கங்கையில் மிதந்து வந்ததை

நேற்று மாலை கண்டதாகச் சொன்னார்கள்

காசிப் பசுவின் காய்ந்த சாணத்தை

ஆன்லைனில் விற்பதற்காக

சேகரித்துச் செல்கிறார்கள் - நவீன

வியாபார நுட்பமறிந்த விற்பன்னர்கள்.

மிக குறுகிய சாலைகளில்

கடந்து செல்கையில்

மனிதர்கள் மீது உடல் தேய்த்துச்

செல்லும் அவற்றைக் கண்டு

அர்த்தநாரியின் மகா ரிஷபம்

பெண்ணுரு கொண்டு

பசுக்களாய் திரிகிறதென்று

கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்கள்

மோட்சத்திற்கு வந்தவர்கள்.


படகு

காட்சி – 1

நீர் தாலாட்டியபடி இருக்கும்

பயணிகளற்ற படகில் – படுத்தபடி

பாடுகிறான் படகோட்டி – தன்

இறந்து போன தாயைப் பற்றி.

அதிகாலைக் குளிரின் நிசப்தத்தில்

பிரிவின் சோகம் ததும்பும் அக்குரல்

துல்லியமாய் ஒலிக்கிறது

காட்டில் நள்ளிரவில் இழுமென விழுமொரு

சிற்றருவியின் தனித்த பாடல் போல.

படித்துறையில் இறங்கி நான்

கால் நனைக்கும் முதல் நொடியில்

சில்லிடும் நீர் – உடல்

உள்ளே பழகப் பழக வெதுவெதுப்பாகிறது.

பனிக்குடத்தினுள் சுழன்றதைப் போல

நீரினுள் அமிழ்ந்து மிதக்கிறேன் பேரமைதியுடன்.

படகோட்டி இன்னும் பாடிக் கொண்டிருக்கிறான்

மேகங்கள் சேர்ந்து கலையும் நாடகம் பார்த்தபடி.

மூழ்கியபடி நீந்திச் சென்று படகைக் கவிழ்க்கிறேன்

படகோட்டியே….உன் இம்மை மறந்து வா….

நாம் திரும்புகிறோம் நம் கருவறைகளுக்கு.

 

படகு

காட்சி – 2

துடுப்புகள் நீரில் துழாவும் தாள இசையில்

உருவாகும் நுரைச் சுழல்களில் லயித்திருக்கும்

என் கவனம் திருப்பி

எதிர்திசையில் நகரும் – வேறொரு

படகிலிருந்து கையசைத்துச் செல்கிறாள்

என்னைப் போலவே இருந்த இன்னொருத்தி…!

மறுநாள் அதே படகுகளில்

அதே இடத்தில் பார்த்துக் கொண்டோம்.

படகின் பக்கவாட்டில் திரும்பி

நீரை அள்ளி முகத்தில் அடித்தவாறு கேட்டாள்

நாம் முன்பே சந்தித்திருக்கிறோமா என.

சந்திப்பு நிகழ்ந்தது – ஆனால்

இந்த நதியில் இல்லை என்றேன்

புருவங்களிலிருந்து கண்களுக்கு இறங்கும் நீரை

துடைத்தபடி சொன்னாள்

ஆம்....சந்தித்தவர்களும் நாம் இல்லை என்று.

காலமற்ற நதி பால்வெளியில் பாய்கிறது

சகலத்தையும் பார்த்தபடி.. !

 

படகு

காட்சி - 3

கங்கைக் கரையில் நடக்கும்

மாலை நேர ஆராதனையை – நதிப்பரப்பில்

நிறுத்தப்பட்டிருக்கும் பல படகுகளிலிருந்து

தரிசித்த ஜனத்திரள் கலைந்து செல்கிறது

கூடடையச் செல்லும் பறவைகள் போல.

எனக்கு முன்னே நூறு படகுகள்

எனக்கு பின்னே நூறு படகுகள்

நானிருக்கும் படகைக் கடந்து

அடுத்த படகிற்கு

கைகள் பிடித்தவாறு தாவிச் செல்கின்றனர்

ஒரு கணவனும் மனைவியும்

ஒரு தகப்பனும் மகனும்.

நதியின் குளிர் காற்று காதில் கிசுகிசுக்கிறது

மாயா….! அவர்கள் கரம் பற்றிச் செல்வது

எத்தனையாவது பிறப்பின்

எத்தனையாவது உறவென்று அறிவாயா..? !

படகு தாண்டி படகு தாண்டி

கரையை அடைய முயல்வது போல்

பிறவி தாண்டி பிறவி தாண்டி

நீ கடக்கத் துணிவது எதை.. ? என.

சட்டென்று அறுந்து போகிறது

பாசக் கயிற்றின் பிணைப்பும் பயமும்.

நதியின் இருள் மடியில்

பூக்களுக்கு மத்தியில்

மிதந்து செல்கிறது

ஒரு தீபத்தின் சிறிய வெளிச்சமொன்று.

 

மணிகர்ணிகா -1

அகோரி காதை

குறுக்கே வெட்டப்பட்ட வஞ்சிர மீனின் துண்டங்களென

மிதக்கின்றன கங்கையின் படகுகள் என்கிறேன்

உடைந்த படகுகளென மிதக்கின்றன

இறந்த உடல்கள் என்கிறான் அகோரி.

 

தாள முடியாத இப்பின்பனிக்காலத்தின் மாலைக் குளிருக்கு

மரக்கட்டைகளில் கனல்மூட்டி குளிர்காயலாம் என்கிறேன்

இது நீடித்து எரியும் நல்ல கட்டை என்று – விறைத்திருந்த

ஓர் உடலைத் தூக்கி நெருப்பில் எறிகிறான் அகோரி.

 

சிதை நெருப்பின் பிளவுண்ட நாவுகளென

தாகங் கொண்டு காற்றில் அலைவது

எரியும் உடலின் நிறைவேறா ஆசைகளா என்கிறேன்

அவை அவ்வுடலின் மீது பித்தேறி ஆடும் சிவனின்

செஞ்சடைக் கற்றைகள் அன்றோ என்கிறான் அகோரி.

 

கபால கிண்ணத்தில் அவன் ஊற்றிக் கொடுத்ததைச் சுவைத்தபடி

இப்பழங் கள்ளை விட தொன்மையான மது எது என்கிறேன்

இந்த இடுகாட்டு இரவில் சோமன் சிரசில் சிந்தும் நிலவொளியை விஞ்சிய 

போதை தரும் பானம் ஏதுமில்லை என்கிறான் அகோரி.

 

உன்னைப் போல் நான் ஆவதற்கான மார்க்கம் என்ன என்கிறேன்

அவன் என் கையிலிருந்த பொன்வளையைக் கழற்றி

அப்போது தான் அங்கு வந்து சேர்ந்திருந்த பிணத்தின் முன் நீட்ட

கண்கள் திறவாமல் பெரிதாய் இளிக்கிறது அது.

உனக்கும் இவனுக்கும் எப்போதும் சாத்தியமில்லை என்று

குலுங்கி குலுங்கிச் சிரிக்கிறான் அகோரி.

 

உறுதியாக இலக்கை அடையும் வரை

எங்கும் நிற்கப் போவதில்லை என்கிறேன்

இந்தப் பாதையில் இலக்கு என்னவென்று - அறியாத

அறியாமையை ஏற்றுக் கொள்வது மட்டுமே

அதை நெருங்குவதற்கான ஒரே உபாயம் என்கிறான் அகோரி.

 

பேச்சற்று நிற்கும் என்னை மறந்தவனாக

மயானப் புகையும் கஞ்சாப் புகையும்

சேர்ந்த கலவையின் கிறக்கத்தில்

விடாது ஊளையிடும் நரி ஒன்றை

வாஞ்சையுடன் கட்டியணத்துக் கொஞ்சியபடி

நீறு பூத்த நெருப்பின் சாம்பலில் புரள்கிறான்

அநித்யத்தை வெல்லும் சூத்திரத்தை

ஒரு மாயக் கயிறெனக் கட்டியிருக்கும் அகோரி.

 

மணிகர்ணிகா - 2

பிரிவாற்றாமையில் பிதற்றுபவளைப் பேய் தேற்றும் படலம்

எதிலிருந்து எனை மீட்க அழுகிறாய்?

சிறையிலிருந்து விடுபட்டவனுக்காய்

சிரிப்பதல்லவோ தர்மம்.. !


வெளித்தாழிட்டு இறுக அடைத்தாயிற்று

ஒன்பது வாசல்களையும்

இல்லாத சாவிக்காக நீ முறையிட்டு என்ன பயன்.!?

 

நான் ஆகிவிட்ட சவம்

நீ ஆகப்போகும் சவம்

இடையில் நிற்கும் காலமெனும் மாயத்திரையை

கன்ணீர் துடைத்துக் கடந்து பார்.

 

ஒழுகிக் கொண்டேயிருக்கும்

உன்னுடைய ஓட்டைப் பாத்திரத்திலும்

மிஞ்சப் போவதில்லை

அந்த கடைசி ஒரு துளியும்.

 

வற்றவே வற்றாது பிறவியெனும் பேராறு

பெருங்கடலொன்றில் கலந்து – பின்

ஆகும் வேறு வெறு ஆறுகளாய்

 

சேறடர்ந்த காட்டெருமை மீதமர்ந்து

சிறு தூரம் செல்லும் ஒரு புள்ளென

மரணத்தின் முதுகின் மீது

தோன்றி மறையும் ஒரு வாழ்வு.

 

வாழ்வெனும் நெடும்பயணம் முழுதும்

எரிமருந்து தடவிய திரியெனக்

கனன்றபடி வரும் மரணத்தின் கங்குகள்

பாதை முடிகையில் வெடித்துச் சிதறுமன்றோ.!

  

அடுப்பிலிருந்து பழைய சாம்பலை அகற்றி

புதிய விறகுகளை மூட்டுவது போல்

மிச்சமிருக்கும் நாட்களைக் கடத்த – வழக்கம் போல்

வேறு கவலைகளை எரிக்கத் துவங்கு.

 

புதிர் தெருக்கள்

காட்சி – 1

புதிர்நெறிப் பாதைகளில் - வெளியேறும் வழி தேடி

ஓடி ஓடி அலையும் சிறு எலியைப் போல

சந்திகளில் சேர்ந்து – பின்

கிளைத்து கிளைத்து பிரியும்

காசி நகரின் தெருக்களினூடே

சாதகி கண்டடைய முயல்கிறாள்

அரிதான ஞானத்தின் வாயிலை.

கூப்பிடும் குரலுக்குத் துள்ளி வரக் காத்திருக்கும்

வாசலில் படுத்திருக்கும் வளர்ப்புப்

பிராணியைப் போல்

முனகுவது சிறிதும் கேட்காதபடி – அமைதியாக

உடலுக்கு வெளியே நிற்கிறது அவள் மனம்.

தீவிரமான யோகத்தின் உச்சத்தில்

நாசியின் நுனியில் மட்டுமே அசைவுறும்

சுவாசத்தின் தீர்க்கத்துடன்

நகருக்குள் திரியும் அவளை

கண்டவர்களின் முகங்களில்

ஒன்றைக் கூட ஏறிட்டுப் பார்க்கவில்லை சாதகி.

மிகுந்த பிரயாசையுடன் அவள் காண விரும்பியதெல்லாம்

நீண்டு – அகலம் குறுகிய வீதிகளின்

வியூகம் போன்ற பின்னல்களில்

தனக்கான விடுதலையைத் தரவல்ல

ஒரு திருப்பத்தின் திறப்பை மட்டுமே.

 

புதிர் தெருக்கள்

காட்சி – 2

தெருக்களெங்கும் சித்திரங்கள் வரையப்பட்ட

விசித்திர நகருக்கு முதன்முறை வரும் யோகினி

ஊர் முழுக்க வலம் வந்தது

அப்புராதன நகரின் வயதே தனக்கும் என்ற

ஒரு சமத்காரச் சைத்ரிகனுடன் தான்.

வண்ணங்கள் குழைக்கும் தட்டை கேடயம் போலவும்

விதவிதமான தூரிகைகளை அம்புகளைப் போல

தன் அம்பறாத் தூணியில் அணிந்த அவன்

ஒரு மென்மையான போர்வீரன் என்கிறாள் யோகினி.

ஊர் உறங்கும் இரவுகளில்

நகரின் சுவர்களில் வழிநெடுக

பிரகாசமான ஓவியங்களைத் தொடர்களாக

வரைந்து செல்லும் அவனை

ஒரு தேன்சிட்டின் வடிவு கொண்டு பின் தொடரும் யோகினி

அவிழ்க்க முயல்கிறாள் - கோடுகளிலும் வளைவுகளிலும்

அவன் ஒளித்து வைக்கும் புதிர்க் கதைகளை.

குளிர்புலரியில் எழுகின்ற கதிரால்

கங்கை நீரில் தோன்றும் பல்நிற ஜாலங்கள் போன்று

தீட்டுவதற்கு சாத்தியமற்றது வேறேதுமில்லை என்பவனிடம்

நீண்டு புரளும் கட்டுக்கடங்காத தன் கரிய கூந்தல் சரிவு முழுதும்

மயிற்பீலியின் ஒளிமிகு வர்ணங்களைப் பிரதிபலிக்கச் சொல்கிறாள்

சவாலான புன்னகையுடன் யோகினி.

 

தீ நின்ற பாதம்

இட்ட அடி நோக

எடுத்த அடி கொப்பளிக்க

நடக்கின்ற நிலம் யாவும்

பொசுங்கிக் கருக

அறுதியான பொருள் தேடித்

தட்டழியும் தடமெங்கும்

ஒரு கணமேனும் எங்கும்

எனை நிற்க விடாத

தீ நின்ற பாதம் எனக்கு.

.

அடி தொற்றி

ஒரு கொடி போல் சுற்றி

மேலேறி முடி வரை செல்லும்

தன்னை அழிக்கும் அக்னியைத்

தானே சுமந்து திரியும்

பித்தர் கூட்டம் பின் தொடரும்

நீர்மை நின்ற பாதத்து* ஈசா…

உனை அறிந்த போதிலும் அணையாத

தீ நின்ற பாதம் எனக்கு.

 

*-சிவவாக்கியர் சொல்லும் பாதம்

அன்னபூரணி

கொங்கைகள் மீது

கபால மாலை மோத

தாண்டவம் ஆடும் காளியை

மலிவான ஊர்த்துவத்தில்

வெல்கிறான் சிவன்

ஏமாற்றத்தின் உக்கிரம் உச்சமேறப்

பக்கவாட்டில் சுண்ணாம்பு தடவப்பட்ட

கரிய எலுமிச்சைகளென

உருள்கின்றன காளியின் கண்கள்

மஞ்சள் சரக்கொன்றை மாலையைப் பிய்த்தெறிந்து

தரையில் வீழ்த்தி – அவன்

மீது ஏறி அமர்கிறாள்

தாந்திரீகத்தின் ஆதி தலைவி.

ஒரு கை அன்னத்திற்காக

அவள் வாசலில் பிச்சையோடு ஏந்தித்

காத்திருந்தது நினைவிற்கு வர

சவமாய் அடங்குகிறான் சிவன்.

 

ஒன்றா…..வேறா….?

இந்த விளக்கின் நுனியில்

நின்று எரிந்திருக்கிறேன்

எண்ணற்ற முறைகள்.

தொடர்ந்து எண்ணெய் ஊற்றி...

திரியை மட்டும்

திரும்பத் திரும்ப மாற்றி...

ஒவ்வொரு முறையும்

எரியும் சுடர்

ஒன்றே தானா.... ?

வேறு....வேறா.... ?


பொய்யை வாழ்தல்

 

ஒரு கனவை வாழ்தலைப் போல்

அவ்வளவு எளிதல்ல

ஒரு பொய்யை வாழப் பழகுவது.

முதலில் அது பொய்யே இல்லையென

யாருமில்லாத போது

உரக்கச் சொல்ல வேண்டும்.

பின் – அது உங்கள் வாழ்வில் நுழைவதற்கு முன்

நிகழ்த்தப்பட்ட தினசரி வழமைகளில்

ஒன்று கூட தவறாது

பார்த்துக் கொள்ள வேண்டும்.

பாகன் தன்னை கட்டிப் போட்டிருக்கும்

சம்பிரதாயமான சன்னக் கயிற்றை

அவிழ்க்கவே முடியாதென

எண்ணும் யானையைப் போல்

அந்த பொய்யைத் தாண்டிய

வாழ்வே இல்லையென

உங்கள் ஆழ்மனதை

நம்பச் செய்ய வேண்டும்.

சற்று ஸ்திரமடைந்த பிறகு

பொய்யை அழைத்து – அதன்

விரிந்த காதுகளில்

‘இனி உன் பெயர் உண்மை’

என மூன்று முறை ஓத வேண்டும்.

ஆயிற்றா…?!

ஆனால் – இந்த முறையான திட்டமிடலில் ஒரேயொரு பிசகு உள்ளது.

இன்னொருவருடைய பொய்யை

நீங்கள் வாழ

இது கொஞ்சம் கூட உதவாது.

உள்வாங்குதல்


உன் உலகைப் புரட்டிப் போடும்

பேரதிர்ச்சியான செய்தி ஒன்றை

நீ அறிந்து கொள்கையில்

உன் புழக்கடையில்

ஆர்ப்பரிக்கும் அலைகளுடன்

கரை மோதிக் கொண்டிருந்த

கடலொன்று திடீரென பல காத தூரம்

உள்வாங்கிக் கொள்கிறது.

அவ்வளவு ஆழமாக நீளமாக அகலமாக

அகோரமாக வாய் பிளந்து கிடக்கும்

புதை பள்ளத்தின் முன் – முழுவதுமாய்

ஸ்தம்பித்து மூச்சடைத்து நிற்கிறாய்.

மேனியெங்கும் ஏறத் துவங்கும்

நூற்றுக்கணக்கான விஷ எறும்புகள்

உன் விழிகளை அடைந்து

பார்வையை மறைக்கும் முன்

மூர்ச்சித்து விழுகிறாய்.

…………………………………………..

…………………………………………..

………………………………………….

கண்கள் திற..

எழுந்து கொள்.

கானகத்தின் வலுமிக்க எதிரியுடன்

போருக்குத் தயாராகும் முள்ளம்பன்றியென

உடலைச் சிலிர்த்துக் கொள்.

முன்னே தெரியும் மாபெரும் பள்ளம்

இதயத்தினுள் இடம் மாறி விட்டது

என்றா நினைக்கிறாய்….?!

பரவாயில்லை..

கடலை குடிக்கத் துவங்கு.

நிதானமாக – கடைசித் துளியும் மிச்சமின்றி.

கலைந்து கிடக்கும் கேசத்தை

சரி செய்து கொள்.

இருள் அடர்ந்து இறங்கத் துவங்குகிறதா..?

ஒன்றும் பழுதில்லை.

காணாமல் போன கடலுக்கும்

நிற்கின்றன பார்…

நெடுவழியெங்கும்

எத்துணை கலங்கரை விளக்கங்கள்..!!

சிகிச்சை

 

​படுக்கையறையில் அமர்ந்தபடி

நம்ப முடியாது திகைக்கிறாள்

நீரின்றி வதங்கும்

பலகணியின் தொட்டிச் செடி மீது

தனக்கு இப்போதும் இரக்கம் பெருகுவதை.

வெயிலிலேயே காய்ந்து கிடந்தாலும்

ஈரம் உறிஞ்சாத கருங்கல் தளமென

இன்னும் மாறாதிருக்கும்

பூம்பஞ்சென மீள்கின்ற நுண்மனதை

புரியாது உற்று நோக்குகிறாள்.

கண்ணாடிக் குடுவையினுள் போட்டு

குலுக்கப்பட்ட கூழாங்கற்கள்

விரிசல்கள் ஏற்படுத்தவே இல்லையாவென

வியப்புடன் சோதிக்கிறாள் திரும்பத் திரும்ப.

திரவமாக வழிந்து ஓடுவதைத் தடுக்க

குளிரூட்டி கெட்டிப்படுத்துதல்

அதிக உஷ்ணமேற்றி ஆவியாக்குதல்

என்று இரு வழிகள் தானே…

இரவும் பகலும் தன்னை விடாது நோகடிக்கும்

தாளமுடியாத அந்த வலியை மறுக்க

தன் பற்களைத் தட்டி உதிர்த்து

மணிக்கட்டிலிருந்து உருவிய நரம்பில்

வரிசையாகக் கோர்க்கிறாள்.

குளியலறையில் யாரோ சாவதானமாக

நகம் வெட்டும் ஒலி கேட்கிறது.

தொலைதூர நங்கூரம்


ஒரு நிலவு எமோஜியுடன்

நீ ‘’நல்லிரவு‘’ சொல்லி

விடைபெறுகையில் தான்

இந்த இரவு உண்மையாய்ப் பிறக்கிறது

அதன் இயல்பான அடர்த்தியோடும்

அடுக்கடுக்கான அழுத்தங்களோடும்.

திடீரென்று நான் மிகவும்

நிராதரவாய் உணர்கிறேன்.

அந்தரத்தில் நடக்கையில்

கழியைத் தவற விட்ட

கழைக்கூத்தாடியைப் போலவும்….

மற்றொரு

கொடுங்கனவின் பாதையில்

பற்றியிருந்த கையொன்று

சட்டென்று உதறிச் செல்வது போலவும்.

​…………………………………………………………………

.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,

​கூர்மையான பற்கள் கொண்ட

பசித்த முதலையென

வாய் பிளந்திருக்கும் இவ்விரவுக்கு

என் உறக்கத்தை உருட்டி

இரையாக எறிகிறேன்.

பின் – ஆழ்மனதின் ஏக்கமொன்று

வௌவாலென அறை முழுதும்

சிறகடிப்பதைப் பார்த்தவாறிருப்பேன்

விடியல் நுழையும் வரை.

குறுஞ்செய்திகளின் டிக் மார்க்குகளுக்கு

நீல ரத்தம் பாய்ந்து – அவற்றின் கீழ்

செவ்விதயப் பழங்கள் கனியத் துவங்குகையில்

அனைத்தையும் உன்னிடம் ஒப்படைத்து

நிம்மதியாய் உறங்குவேன்.

கடலோடித் திரிந்த கப்பல்

நங்கூரத்தின் உறுதியில்

அமைதியாய் ஓய்வெடுப்பது போல.

நிழல் நிலா

 

​மயக்கமான மாய அந்திகளில்

நீ நடந்து செல்லும் – ஒரு

நதிக்கரையாக இருக்க விரும்புகிறேன்.

இல்லையெனில்…

ஒரு கடற்கரையாக….

ஆற்றங்கரையாக…

தடாகக் கரையாக…

அணைக்கட்டின் கரையாக…

தளும்பித் ததும்பி

பாய்ந்தோடி

ஆர்ப்பரித்து

நுரைத்துப் பொங்கி

மௌனமான தேக்கத்திலும் கூட

வெவ்வேறு விதங்களில்

வெவ்வேறு வடிவங்களில்

கரையோரங்களின் நீர்விரிவுகள்

சொல்லிக் கொண்டே இருப்பது

தீராத என் காதலை அல்லவா…!

காற்று வீசும் திசையெலாம்

அலைகள் மீது ஆடிச் செல்லும்

ஆளற்ற வெற்றுத் தோணியைப் போல

உன் பாதைகளின் திருப்பங்களிலெல்லாம்

மேகங்களில் மிதந்து கூட வரும்

தனக்கென்றோர் அர்த்தமில்லாத

அந்த

அரை நிலா.

முயக்கம்

 

​நீ – கண்களின் இடத்தில்

இரத்தினக் கற்கள் கொண்ட

கரு நிற இராஜநாகம்.

கரிய உடலில் செவ்வொளி கதிராட

நீ படமெடுக்கையில்

மாறன் கை வில்லென

வளைகிறது என் தேகம்.

ஆலம் விழுதுகளைச் சுற்றி – நாம்

பின்னிப் பிணையும் சொப்பனங்களில்

காமத்தின் விடம் அமுதெனச் சொட்டுகிறது.

தாழம்பூ காடுகள் வாய்க்கவில்லை நமக்கு.

இந்தக் கான்கிரீட் மண்டலத்தில்

சம்பங்கிப் பூக்கள் மயக்கும் வாசத்துடன்

மெத்தென உதிர்ந்திருக்கும்

நிலா மேயும் முற்றமொன்றில்

வெண்மஞ்சள் சாரையெனக் காத்திருக்கிறேன்

சரசரவென விரைந்து வா….

பூரணம்

 

​தொடுவானம் வரை நீண்டிருக்கிறது

நம் நினைவின் ஏரிக்கரை.

அந்தியில் – மெல்ல இதழ்கள் விரிக்கும்

செவ்வல்லி மலர்களுக்குள்

பகல் முழுக்கத் துஞ்சிய இரவு

கருவண்டென வெளியேறி

காற்றில் இருள் சேர்க்கும்.

கொட்டும் பனியில் இதென்ன…?!

நம் ஆலிங்கனத்தின் பூரணமா

வெண்ணெய்ப் பந்தெனத் திரண்டெழும்பி

வானில் ஒளிர்கிறது…?!!

உன் சுட்டுவிரலால் தொட்டு

கொஞ்சமாய் ருசிக்கிறேன்

இக்குளிர் மாதத்து முழுநிலவை.

கற்கண்டாய் இனிக்கும் இது

இனி – உன் பிரிவில்

கற்பூரக் கட்டியெனக் கரையத் துவங்கும்.

மென் புகை…உதிர் மலர்


​மலைச்சிகர உச்சியில்

உயர்ந்த மரக்கிளைகளை

ஊடுருவும் வாடைக் காற்றில்…

மென்சோகத்துடன் பூத்திருக்கும்

ஜெகரண்டா மலர்களின் தனிமை…

புகை போன்ற கால்களால்

மேகங்களுக்கிடையில் நடக்கிறது.

​கரடுமுரடான மர வேர்களில்

தும்பிக்கையை ஊன்றி…

துயர் தாங்கி ஒற்றையாய் நிற்கிறது…

காட்டுத்தீயில் களிற்றைப் பறிகொடுத்த

தேற்றுவாரற்ற பெண் யானை.

அரவமற்ற இரவில்…

கரிய முதுகின் மீது

மௌனமாய் உதிர்கின்றன

ஊதா நிற மலர்கள்.

உள்ளொளி


​கருங்கல் தூணில் சாய்ந்து

பகவதியின் அம்பலத்து

தாழ்வாரத்தினின்று அமையும்

சரம் சரமான விளக்குகளை நோக்கியபடி

நீ ஏங்கி நிற்பது ஏனோ….?!

கொஞ்சம் கவனித்துப் பாரேன்.

என் மனதின் பிரகாரங்களை..

அதில்..

பொன்சுடர் அசைய எரியும் தீபங்களை..

அத்தனை தீபங்களின்

மொத்தமான

ஒரே

மகா வெளிச்சம்

நீதானே…!

மூன்றாவது நிழல்


​என் காதலனின்

இறந்து போன முன்னாள் காதலி

தன் இருப்பை

உணர்த்திக் கொண்டே இருக்கிறாள்

உணவில் அதீதமாய் கலந்து விட்ட

பிரித்து விட முடியாத உப்பைப் போல்.

வேலமரப் பூக்களில் – அவள்

ஒரு பட்டாம்பூச்சியென அமர்ந்து

மிதந்து செல்லும் போது

அவளென்று அறியாது

அவளைப் பிடிக்க கை உயர்த்துகிறான்.

ஒரு புலரியின் கூடலில்

மேற்கூரையில் மங்கலாய்த் தெரியும்

மூன்றாவது நிழல் யாருடையது?

செனெவில்லின் பியானோ இசை

மனதின் உச்சஸ்தாயிற்குச் சென்று கீழிறங்குகையில்

அவனை அணைத்துக் கொள்கிறேன்

அப்பொழுது

அவளையும் சேர்த்தே தான் அணைக்கிறேன்.

உன்மத்த மலர்

 

​பிறழ்வின் கோடுகளைத் தொடும்

உன் காதலின் வண்ணம்

அழுத்தமான இளஞ்சிவப்பு.

அதே நிறத்தில்

உன் வெளியெங்கும் மலர்ந்து

காற்றில் கிறுகிறுக்கின்றன

உன்மத்தத்தின் செங்குவளை மலர்கள்..

காமத்தின் கள்ள நீலம் பாய்ந்திருக்கும்

அடர்சிவப்பு அல்லிகள்..

மோகத்தின் கிளர்ச்சியேறி

மென்காற்றில் மெல்லத் துவளும்

மேக வண்ண ஆம்பல்கள்.

நீர்ப்பரப்பின் மீது இடைவெளியற்று

நிறைந்து பூத்திருக்கும்

உன் தாபத்தின் பசியக் குளத்தின் மீது

இடைவிடாது பெய்து கொண்டேயிருக்கிறது

பெருஞ்சப்தமிட்டபடி அடை மழை.

கண்ணாடிக் கூரை கொண்ட ஸ்நான அறையில்

உன் உடல் வெப்பத்தில் சூடேறி

குமிழ்கள் உடையும்

குளியல் தொட்டி நீரைக் கிழித்து

முகிழ்த்து மேலெழுகின்றன

உன் நிறைவேறாத வேட்கையின்

நீண்ட தண்டுகள் கொண்ட

கருப்பு நிறத் தாமரைகள்.

ஆயிரங்கால் தனிமை


இரவின் தோட்டத்தில்

கருங்கல் சில்லுகளுக்கிடையில்

ஆயிரம் கால்களுடன் ஊர்ந்து செல்லும்

கரிய மரவட்டையென

நகர்கிறது இந்த தனிமை.


எதைத் தருவது…?


​உனக்கு தர

மிகவும் அபூர்வமான

ஒன்றைத் தேடுகிறேன்

விலைமதிப்பில்லாத ஒன்றை

உலகம் இதுவரை அறிந்திராத ஒன்றை

நீ முற்றிலும் எதிர்பாராத ஒன்றை.

ஆனால் – ஏதொன்றும்

கைக்கு வரப்பெற்றதும்

நீர்ப்பாதையின் கூழாங்கல்லெனக்

குளிர்ந்து விடுகிறது.

ஏழு மலைகளுக்கப்பால்…

ஏழு கடல்களுக்கப்பால்…

இருண்ட குகையின்

கதவற்ற கூண்டுக்குள் தத்தும்

தங்கக் கிளியே….

கூழாங்கற்களைச் சேகரித்தபடி

நடுகல்லென சமைந்து போன யாரையேனும்

தெரியுமா உனக்கு…?!

சொல்

 

​ஒரு சொல்லுக்குள்

கடல் ததும்பி நிற்பதை

இன்று பார்த்தேன்.

பின்

கடலின் மேல்

ஒரு சொல் எழுதப்பட்டதையும்

நின்று பார்த்தேன்.

அப்புறம்

அது ஒரு கடற்காகமென எழும்பி

வானில் திரிந்து கொண்டிருந்தது.

சற்றே பொறு…

என் தோளில் வந்தமர்ந்தால்

சொல்லி அனுப்புகிறேன்.

உன் கைகளுக்கு மாற்றிக் கொள்கையில்

அது ‘கா’வெனக் கரைந்து

வெள்ளை நுரையென வழிந்து

மஜ்ஜை வரை நனைத்தோடும்

மாயம் காண்பாய்.

நான் என்பது..

 

​என் இதயத்தை

எல்லோரும் பார்க்கும்படி

என் சட்டைப்பையின் மேல் தைத்திருக்கிறேன்.

மேல் வானில்

செம்மையாய்ச் சமைந்திருக்கும்

அந்திச் சூரியனைப் போல.

என்னைப் பற்றிய வாக்கியங்களை

மிகச் சுலபமாய்

பிரகடனப்படுத்துகிறேன்.

இலையுதிர் காலத்தின் சருகுகளென

அவை – சாலையோரம்

சரசரத்துத் திரியும்படி.

என்ன…

இப்போதெல்லாம் – நான் எனது

என்று பேசுவதுதான்

சற்று அசூயையாக உள்ளது.

கல்லறை நிலத்தின்

ஈர மண்ணில் காத்திருக்கும்

சின்னஞ்சிறு புழுக்களே..

உங்களுக்குப் படைக்கப்படும்

எந்த இரகசியமுமற்ற

ஓர் உடலை

எவ்வளவு ஆசையாய் உண்பீர்கள்…..!

ஏற்பது இகழ்ச்சி…??.!.!

 

​அவள் யாரும் பார்க்காதவற்றை எல்லாம்

கண்டு கொள்கிறாள் – இருப்பினும்

எல்லோரும் சுலபமாகக் காண்பதை

இலகுவாகத் தவற விடுகிறாள்.

இப்படித்தான்

3டி காட்சியின் சித்திரங்களென

வாழ்வின் திரையில்

துருத்தி நிற்கும் உண்மைகளை

புறங்கையால் விலக்கி ஒதுக்குகிறாள்.

புரைதீர்ந்த நன்மை பயக்குமெனினும்

எத்தனை பொய்களை ஏற்கலாம்….?

வளர்ந்த தன் குஞ்சுகளில்

வால் நீண்டது குயிலினுடையதெனப் புரிந்ததும்

கூட்டிலிருந்து துரத்தி விடும்

காகங்களுக்கு மத்தியில்

தான் அடைகாத்துப் பொறித்தவற்றுள்

சுளகு போன்ற அலகு கொண்ட

வாத்துக் குஞ்சை – எவ்வித மறுப்புமின்றிச்

செட்டைகளுக்குள் அரவணைக்கிறது

அந்த வெகுளியான தாய்க்கோழி.

ஜதி


​அடுக்குமாடிக் கட்டிடத்தின்

மூன்றாம் தளக் குடியிருப்பில்

தட்டப்படும் நட்டுவாங்கம்

தாளம் தப்பாது ஒலிக்கின்றது.

இரண்டாம் தளத்தில் வசித்தவள்

தூக்கிலிட்டுக் கொண்ட மின்விசிறி

மின்சாரம் திரும்பியதும்

குறைந்த விசையில் சுழல்வதும்

அணைந்ததும்

சட்டென்று நிற்பதுமாய் இருக்கிறது.

கடிகைச் சுற்று திசையிலும் – பின்

எதிர் இடஞ்சுழியிலும் சுழன்று

ஜதிக்கேற்ப ஆடுகிறது அவள் உடல்

தையா தா ஹா..

தலைகீழாய் தொங்கும் வாழ்வு

 

​எவ்வளவு சுதந்திரம் உன் ஜீவிதம்….!


​அப்படியா…..!?


​எண்ணிய பின் துணிந்தாலும்

துணிந்த பின் எண்ணினாலும்

ஒரு வேறுபாடும் இல்லையே உனக்கு.


​ஓஹோ…!


​எங்கு வேண்டுமானாலும் போகலாம்

எதை வேண்டுமானாலும் செய்யலாம்.


​ம்…

​அப்புறம்…


​நிறுத்து தோழி..

கொல்லைப்புறத்தில் விரிந்திருக்கும்

மாமரத்தில் வீற்றிருக்கும் வௌவாலைப் பார்.

இறக்கைகள் இருந்தாலும் கூட

வாய்த்தது என்னவோ

தலைகீழாய்த் தொங்கும் வாழ்வு தானே….?.!

மாதிரிகள்

 

​இப்பூங்காவின்

எல்லா பச்சைகளுக்கும் நடுவிலும்

காதலர்கள் – கண்கள் பார்த்தபடி

விரல்கள் கோர்த்தபடி

தோள்கள் உரசியபடி.

நான் – என்

மிகப் பழமையான காதல் ஒன்றை

திரும்பிப் பார்க்கிறேன்.

நிறுத்தத்திலிருந்து புறப்பட்டு

வெகு தொலைவு சென்று விட்ட

இரயிலின் பின் பக்க விளக்கின்

சிவப்பு ஒளியை – அது

தொடுவானத்திலிருந்து மறையும் வரை

பார்த்துக் கொண்டே நிற்பது போல்.

எவ்வளவு நிச்சலமான தருணம்…!

ஆனால் பாருங்கள்..

நெடிதுயர்ந்த மரத்தின் உச்சியிலிருந்து

உதிரும் இலையைத்

தன் இணையென நம்பி

அதன் கூடவே

மெல்லப் பறந்து தரையிறங்கும்

அந்தச் சுயம் மறந்த பட்டாம்பூச்சி

என்னைச் சற்று தொந்தரவு செய்கிறது.

இலக்கு

 

​சற்றே தாழ்ந்த கிளையில் இருக்கும் பூவைச்

சுற்றிச் சுற்றி வருகிறது

மஞ்சள் நிற பட்டாம்பூச்சி.

செடியின் அடித் தண்டை

பற்றிக் கொண்டு

பட்டாம்பூச்சியைப் பிடிக்க

எம்பி எம்பிக் குதிக்கிறது பூனை.

புற உலகு குறித்து

எந்தக் கவனமுமின்றி

வெயிலுக்குள் மறைகிறது பட்டாம்பூச்சி.

இப்போது…..

பறக்காத அந்தச் சிவப்புப் பூவை

பறித்து விடத்

தாவித் தாவிப் பாய்கிறது பூனை.

காலாதீதம்


​சேவற்சண்டை களத்தில்

உதிர்ந்து பறக்கும் இறகுகளின்

எண்ணற்ற ரோம இழைகளென

வாழ்வின் நாட்கள் தொலைந்து

மறைகின்றன – எந்தப் பயனுமின்றி.

கிளைகள் மீதே வெடித்து மணக்கும்

நாகலிங்க மலர்கள்

வாடி வெளுத்த கண்களெனத்

தரையில் வீழ்ந்திருப்பது போல்

ஆசைகளும் கனவுகளும் அடங்கும்

சில போகித்தும் சில மறந்தும்.

இப்பிறப்பின் வழுக்கும் விளிம்புகளைத்

தாண்டுவது எவ்வாறு காலாதீதா…?!

அறியப்பட வேண்டிய ஒற்றைப் பொருளைக்

கண்டடையப் போதுமோ

எஞ்சியிருக்கும் சொற்ப ஆயுள்…!!

காலனைக் காலால் உதைக்க இயலாதவர்கள்

வேண்டுவது எல்லையற்ற காலம் தானே..!

பைரவா…..!

நின் திருப்தியுற்ற நாயின் வாயிலிருந்து

கூரியப் பற்களிடை வழிந்து

நிலத்தில் உருண்டு நிற்கும் குருதித்துளியென

என் வெளியெங்கும்

உறைந்து போய் நிற்கட்டும் இந்தக் காலமும்.

அமைதி


​நள்ளிரவுக் காற்று

கண்ணாடிச் சன்னலின்

திரைச்சீலை விலகுகிறது.

பனிக்கடியில் ஆழ்ந்து

உறங்குகிறது பெரும் மலை.

​கருக்கலில் காகங்கள்

கரைகின்றன – இடைவிடாது.

கோவில் வாயிலில்

கனத்த மணியின் நாவு அமைகிறது

சிறிதும் அசைவின்றி.

​வட்டமாக வானுயர்ந்து

இராட்சத மரங்கள் மூடி நிற்குமொரு வன நிலம்.

வேர்முடிச்சுகளின் தனிமையில் தியானிக்கிறது

நகர் புகுந்து விட்ட ஆதி குடியின்

கல் தெய்வம்.

​மா எரியின் நீல நீர்ப் பரப்பில்

சப்தமின்றிப் பெய்கிறது பருவ மழை

ஓட்டின் பச்சை தெரிந்து மறைய

அமிழ்ந்து மிதந்து நீந்துகிறது

சின்னஞ்சிறு ஆமை.

​குவளைத் தேநீர் மீது பறக்கும்

நீராவி – காற்றில் வரையும்

அரூப ஓவியத்தைப்

பார்வை விலக்காது நோக்கியவாறு

சமைந்திருக்கிறார் முதிய புத்த பிட்சு.

​எரிந்து அணைந்து கொண்டிருக்கும்

சுடலைச் சாம்பல் பொடி பறக்க

வந்து விழுகிறது ஒரு மழைத் துளி

அதன் பின்

மற்றுமொரு துளி.

​கனவில் சந்தித்தவனிடம் ஐயத்துடன்

இது கனவில்லையே என்கிறாள்.

இல்லை என மெலிதாகத் தலையசைத்துச்

சிகைக் கோதி – கண்கள் மூடி

உறங்கச் செய்கிறான் அவளை.

கடவுச்சொல்


​நான் வேண்டுவது ஒரு சொல்.

ஆழ்துளைக் கிணற்றின் அடியிலிருந்து

என்னை இரட்சித்து மீட்டெடுக்குமொரு சொல்.

வெளியேற முடியாத குழப்பங்களின்

விசைமிகு சுழல்களிலிருந்து

சட்டென்று விடுவிக்குமொரு சொல்.

அதிகாலைக் கனவுகளின்

அபாய விளிம்புகளிலிருந்தும்

யதார்த்தத்தின் மாய வலைகளிலிருந்தும்

கடைத்தேற்றும் வல்லமைமிக்க சொல்.

வாசலில் பசியோடு தரையிறங்கும்

பறவைகளுக்கு – நீ அள்ளி விசிறும்

தானியங்களின் ஒரு கைப்பிடியளவு

சொற்கள் கூட அல்ல…அல்ல…

நான் தேடி நிற்பது

ஒரே ஒரு சொல்.

சிப்பி வயிற்றின் தொடர் உறுத்தலை

மறக்கடிக்க – மென்மையாகத் திரண்டிருக்கும்

வெண்மையான நித்திலத்தைப் போல்

பிரகாசமான ஒற்றைச் சொல்.

அச்சொல்லை

ஓர் ஆலின் விதையென

என் முற்றத்தில் ஆழ ஊன்று

அது பிரமாண்டமாய் உயிர்த்தெழுந்து

தன் நூறாயிரம் விழுதுகளால்

என்னைத் துவளாது தாங்கட்டும்….

மலை ஏறும் வழியில்


கரிய கற்பாறைகளினூடே

மெலிந்த சுனை ஓடி வரும் தடத்தில்

காற்றில் ஆடியபடி இருக்கும்

சிறிய பசுஞ்செடிகள் மீது

மெல்ல… மெல்ல…படியும் அந்தியை…

பா..

ர்..

த்..

த..

வா..

று….

நான் இந்த மலைமுகடுகளை நோக்கி

ஏன் ஏறிக் கொண்டிருக்கிறேன்

என்பதை மறந்தே விட்டேன்.

அடைக்கலம்


​தினமும் முன்மதியப் பொழுதுகளில்

துயில் களைபவள்

தன் பின்னந்தலையில்

சதா கொக்கரித்தபடி இருக்கும்

சேவலைச் சபித்தபடி எழுகிறாள்.

அதன் செம்மையான இறகுகளை

ஒவ்வொன்றாகப்

பிடுங்கியவாறு

சப்தங்கள் அடங்கிவிடும்

இரவுக்குள் குதித்துவிடத்

தயாராக நிற்கிறாள்

ஸ்திரமற்ற பகலின் பால்கனியில்.

நிஷாகந்தி


​பகல் – சகித்துக் கொள்ளவே முடியாத

ஒரு வெளிறிய சொப்பனம்.

தெள்ளிய நதியில் கலந்திடும்

தோல் பதனிடும் தொழிற்சாலைக் கழிவின்

வெண்மஞ்சள் நுரைகளெனப்

பாசாங்காய்ப் பரவிக் கிடக்கும்

இந்நாளின் வெளிச்சக் குப்பைகள்

அசுத்தமாக்குகின்றன – என்

சித்தத்தின் கரைகளை.

பூமிக்கடியில் ஓடும்

திசை மறுக்கும் ஆறுகளென – ரேகைகள்

விரவிக் கிடக்கும் உள்ளங்கைகளில்

மறுக்கவே முடியாத உண்மையென

நான் ஏந்திக் கொள்ள முடிவது

ஒரு நிஷாகந்தியென இதழ்கள் விரிக்கும்

இரவெனும் அந்தக் கரிய மலரை மட்டுமே.

புரிதல்


​நாம் இந்தக் காட்டிற்குள் நடந்து

வெகு தொலைவு வந்து விட்டோம்

நீ கையில் வீட்டிலிருந்து எடுத்து வந்த

சிறு பூவொன்றை வைத்திருக்கிறாய்

உனக்கு இன்னுமொரு பூ

வேண்டுமெனத் தோன்றி விட்டது

எளிய விண்ணப்பம் தானே!

ஆனால் – இங்கு

பழுப்பும் பச்சையும் தவிர

வேறு வண்ணங்களே இல்லை

நீ விசும்பத் துவங்குகிறாய்

எங்குமே இல்லாத பூவை

எங்கு போய்த் தேடுவது?

புரிந்து கொள்ளேன்

நீ கண்டு கொள்ள வேண்டியது

இன்னொரு பூவை அல்ல

இன்னொரு வனத்தை

                ​(அம்முவிற்கு)


இரயில் நதி


​பாலத்தின் மீது விரையும்

இரயிலின் சன்னலின் வழி

கீழே மயங்கும் மாலை ஒளியில்

அகன்று ஓடும் ஆற்றைப் பார்க்கிறாள்

முன் பின் பரிச்சயமில்லாத

பக்கத்து இருக்கைக்காரனிடம் திரும்பி

இந்த ஆற்றை முதன்முதலாக

இப்போது தான்

இப்படிப் பார்க்கிறேன் என்கிறாள்

சிறிது திடுக்கிட்டு – பின் உற்சாகத்துடன்

அவன்

ஆறுகளைப் பார்த்த

கதைகளைச் சொல்லத் தொடங்குகிறான்

இளம்பிறை ஒளியின் இரசவாதத்தில்

அவள் பிடித்திருக்கும் துருவேறிய

இரும்புச் சன்னல் கம்பிகள்

பொன்னிறத்தில் மினுங்கத் துவங்குகின்றன

மொத்தப் பயணிகளின் மனத்திரையில்

அவரவர் நீராடிய நதிகளின்

சித்திரங்கள் தோன்றி மறைகின்றன

இரயில் நின்று எல்லோரும்

இறங்கிச் சென்ற பின்னும்

அந்தக் கோச் பெட்டியில்

நீரின் சலசலப்பு

அடங்காமல் கேட்டுக் கொண்டிருக்கிறது.

வசீகர மலர்


​எருக்கம் மொட்டுக்கள் மீது

இதழ் பதிக்கிறது வெயில்

பூ வெடிக்கிறது அவன் இடும்

முத்தத்தின் சத்தத்தோடு

​*

கிளைகளுக்கிடையில் மறைந்திருக்கும்

சிறு பறவையென உன் காதல்

சடாரெனப் பறக்கையில் உதிரும்

ஒற்றைச் சிறகுக்காய் என் காத்திருப்பு

​*

நம் கண்களின் உரையாடல்

சதா ஓர் அகழ்வாராய்ச்சி குறித்து

காமத்தின் கள் ஊறுகிறது

புராதன கலயத்தில்

​*

அடைந்திட முடியாத காதலை

ஒரு வசீகர மலரெனச் சூடிக்கொள்கிறேன்

அது காய்கிறதுமில்லை உதிர்கிறதுமில்லை

​*

மூங்கில் அசைவின் காற்றில் அதிரும்

ஒரு சிதாரின் நரம்பு என் தேகம்

உன் புல்லாங்குழல்கள் ஏன் மௌனம்?

​*

மலையுச்சி இலந்தை மரத்தினூடே

நுழைந்து செல்லும் மென்காற்று உன் ஸ்பரிசம்

கிளிக்கூட்டம் அமரும் நாணல் புல்லெனத்

தள்ளாடத் துவங்கும் என் மனது

​*

தேவாலயத்தில் மண்டியிட்டு

இறைஞ்சுகிறாள் காதலுக்காக

மெழுகுவர்த்திகளும் ஒற்றை வயலினும்

மெல்லக் கசிகின்றன

தரவு


​திமிறும் வெண்புரவிகளின் பிடரிமயிரென

நுரைக்கும் அலைகள் உயரே எழும்

கரைகளெங்கும் ஈரமான பாறைகள்

ஒன்றில் நீ

மற்றொன்றில் நான்

நீ குனிந்து – என்னை

முத்தமிடும் பாவனையுடன் நோக்குகிறாய்

சற்றே கலவரமடைந்து நான்

சுற்றியிருக்கும் கூட்டத்தைப் பார்

இதோ இப்பருவ கால இரவுகளில்

கடலுக்குள்ளிருந்து வெளியே உலாவ வரும்

சிறு நண்டுகளின் பெருங்கூட்டம் போல்

ஊருக்குள் பரவி விடும் – இரகசியமாய்

ஒளித்திருக்கும் உறவின் தரவுகள் என்கிறேன்

நீ பதிலேதும் பேசாமல்

ஊசிக்கண்ணில் நூலை நுழைக்கும்

பார்வையின் கூர்மையுடன்

என் கண்களை ஊடுருவி

உள் நோக்குகிறாய்

நமக்கிடையே இருக்கும் வெளி

தாங்க முடியாததாகித் தகிக்கிறது

நான் எதிர்பாரா கணத்தில்

சட்டென்று

என் இதழ்களுக்குள் அமிழ்ந்து

ஆழமாய் இடப்படுகிறது

ஒரு நீண்ட முத்தம்

பாண்டிச்சேரியின் நண்டுகள்

கடலில் இருந்தால் என்ன

கரைக்கு வந்தால் தான் என்ன..?!

மலை நெருப்பு


​உன் காதல் – இதோ

இந்தக் கண்ணாடி சாளரத்தின் வெளி

வியாபித்திருக்கும் இருளில்

நிழலுருவாய்த் தெரியும்

அந்த மலை போன்றது என்கிறாள்

நானும் என் காதலும்

வெவ்வேறல்ல என்கிறேன்

சிக்மகளூரின் புறநகர் விடுதியில்

காதுமடல்களில் வெப்பக் காற்றை

விசிறச் செய்யும் – ஒரு

மதுப்போத்தலோடு அமர்ந்திருக்கிறோம்

உன் மீட்சிக்கான வழி தான் என்ன..?

என்கிறாள் மிக்க ஆற்றாமையுடன்

காதலில் மீட்சி என்பதே

மெல்ல அழிவது தானே...?!

நெடுங்காலமாய் நொதித்த

மதுவின் வீரியம்

என்னை உடையச் செய்கிறது.

எப்படிச் சொல்ல அவளிடம்..?

நீ

நின்று நிதானமாய்

இந்தப் பச்சை மலை மேல்

பற்றிப் படரும் நெருப்பு என...

முகடுகளெங்கும் கவிந்திருப்பது

பொசுங்கும் வாசத்தின் புகையென...

பிரத்தியேகம்

 

​இன்று உன்னைத் தேடி

உன் வளாகத்திற்கு வந்திருந்தேன்

உனக்கென வாங்க எண்ணி

வாங்காமலிருந்த மலர்களை

கையில் வைத்திருந்தேன்

அருகில் வரும் உனை நோக்கி

பதைபதைப்புடன் அமர்ந்திருந்தேன்

நல்ல வேளை

ஒரு சிறு புன்னகையுடன்

நீ அந்தப் பிரத்தியேக மலர்களை

கண்டு கொண்டாய்

வாங்கி வந்திருந்தால்

அவை உனக்கானதாய் மட்டுமல்லாமல்

எல்லோருக்குமானதாய் ஆகியிருக்கும்.

நீங்கிய பின்னரே


​திருவிழா இரவொன்றில்

வானில் நிகழ்ந்து மறையும்

வண்ணமயமான வாணவேடிக்கையென

சம்பவித்து முடிந்து விடுகிறது

உன் வருகையும் பிரிவும்

வெகு தூரம் அனுப்பி விட்டிருக்கும்

வளர்ப்புப் புறாவொன்றின் திரும்புதலுக்காக

உள்ளங்கையில் அது பொதிந்திருந்த

கதகதப்புடன் காத்திருப்பதைப் போல

எதிர்நோக்கி இருக்கிறேன்

நீ மீண்டு வருவதை.

நீ விட்டுச் சென்றிருக்கும் வெறுமை

ஒரு திடப்பொருளென உருக்கொள்கிறது

உண்மையில்

நீ நீங்கிச் சென்ற பின்னரே

தொடங்குகிறது

உன்னைத் தீண்டுதல்.

விடுபட்ட கண்ணி


​இது கார்காலமா..?

கொடும் பனிக்காலமா..?

அந்தரத்தில் மயங்கிச் சுழல்கிறது

என் கடிகாரம்

கால இயந்திரத்தின் கண்ணியிலிருந்து

தெறித்து விடுபட்ட

ஓர் உலோகத் துண்டமென .

உன் நினைவுகளைக்

கிளர்ந்தெழச் செய்கிறது

மழையின் பொழுதுகள்

அடிமனது ஏக்கங்களை

அடர்ந்து உறைய வைக்கிறது

பனியின் நாட்கள்

ஒரு மகரந்தத் துகளின்

எடையைக் கூடத் தாங்கவியலாது

துவளும் சிறு தும்பியின்

கண்ணாடிச் சிறகு நான்

இரக்கமில்லாத இரு வெவ்வேறு

பருவங்களின் எடையை

எப்படித் தாங்குவது?

குழப்பமான காலத்தின் இரவுகளில்

கண்களில் நீர் வழியக்

கடல் ஆழத்தில் சயனித்திருக்கிறது

கற்சிற்பமொன்று.

முள்


​நல்ல வெயில் காலம் இல்லையா அது?

ஆலப்புழையின் காயலில்

ஒரு பொரித்த கரிமீனிற்காக நாம் சுற்றித் திரிந்த போது…

முச்சந்திகள் நாற்கரச் சாலைகள் என

நீரின் பாதைகளை அவ்வளவு

எளிதில் வரையறுக்க முடிவதில்லை.

நாமிருவர் பயணித்த படகில்

நான் மட்டும் துடுப்புகளிட்டு

வெகு நேரம் புலனழிந்து சுழன்றது

ஒரு துரோகத்தின் நீர்ச்சுழியில் தானே!

காயல் நீரின் மேலே தெரிகிறது என்பதற்காகக்

கானல் நீரில் ஈரம் இருக்கிறதா என்ன?!

அதற்கப்புறம் எத்தனை

வெயில் காலங்களைக் கடந்தாயிற்று!

குரல்வளையில் சிக்கிய

அந்தக் கரிமீனின் சிறிய முட்களை

இன்னும் அகற்ற முடியவே இல்லை.

மறுதலிப்பு


​காட்டின் ஒற்றையடிப் பாதையில்

வாகனமொன்றின் ஒளி வெள்ளத்தில்

செய்வதறியாது மருண்டு நிற்கும்

கள்ளமற்ற மானைப் போல

உன் விழிகளின் இயல்பான வெளிச்சத்தில்

ஸ்தம்பித்து நிற்கிறேன்.

​உண்மையில் எதிரே இருக்கையில் கூட

உன் கண்கள் என்னைச்

சந்திப்பதே இல்லை.

நீ என்னிடம் பேசும் சொற்கள்

வேறு எவரையோ நோக்கியபடிதான்

சொல்லப்படுகின்றன.

​காற்றின் திசை மாறும் வேகத்தில்

சிதறி விழும் ஒரு துளி மழைக்காக

வாய் விரிக்கும் சாதகப் பட்சியென

மிகுந்த பொறுமையுடன் காத்திருக்கிறேன்

நீ கவனமின்றித் தவற விடும்

சிறு பார்வைக்காக.

​எனினும் அந்த மாயக்கணம்

தொடக்கூடிய தூரத்தில் முடிவின்றி

நகர்ந்தபடி இருக்கிறது.

மீன்களற்ற நதியின் மடியில்

சிறு தீண்டல் வேண்டி

நெடுங்காலமாய்ப்

பசும்பாசி அடர்ந்திருக்கும் கூழாங்கல் நான்.

அல்லது

 

​உன் விநோதமான அறிவுரைகள் யாவும்

எப்போதும் தனிமையைத் தனியாக

எதிர்கொள்ள வேண்டிய

அவசியம் குறித்ததுதான்.

நீ கற்றுத் தேர்ந்த இசைக்கருவிகளுள்

எது தன்னைத் தானே

வாசித்துக் கொள்கிறது?

என் சிகையை ஒதுக்க வரும்

உன் விரல்கள் – காற்றில் நடனமிட்டபடி

பாதியிலேயே நின்று விடுகின்றன

நமக்கிடையே உடைக்க முடியாதவை

என நீ பாவிக்கும் சுவர்கள் எல்லாம்

வெறும் காற்றால் ஆனவைதான்

இவ்வளவு அஞ்சத் தேவையில்லை நீ

என் உடல் என்பது இவ்வளவுதான்

ஆயிரம் அல்லிகள் மலர வழியற்று

வாடி நிற்குமொரு நிறை தடாகம்

அல்லது

ஓர் ஆராய்ச்சிக் கூடத்தின்

கண்ணாடி குடுவையினுள்

விகசித்து மலர்ந்திருக்கும்

ஒரு செந்நிறத் தாமரை

Monday, May 4, 2026

அறிதுயில்

பாதரசம் உருகி வழிவது போல

முழு நிலவின் பனிமலைச் சிகரங்கள்

மின்னி ஒளிர்கின்றன

இப்பயண வழியெங்கும்.

மலைப் பாதையினோரத்துக் குகையில்

கனத்த உரோமத்துடன்

உடல் சுருட்டி – குளிர்காலம் முழுதும்

உறக்க நிலையில் செயலற்றிருக்கும்

இப்பெருத்தக் கரடியைப் போன்றதே

நமக்கிடையிலான உறவும்..

வலதுபுறம் ஆழ விரியும் பள்ளத்தாக்கில்

எந்நேரமும் உருண்டிடும் அபாயத்துடன்

நகரும் வாகனத்தின் சன்னலோரம்

அமர்ந்தபடி உணர்ந்து கொள்கிறேன்

என் மனதின் பனிக்காலம் முடியவே போவதில்லை

அந்தக் கரடியின் நீள்துயிலும் கூட.

தேன் மெழுகு


​நம் அந்தியின் அறையில்

ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றுகிறாய்.

சிறிய தழல் இக்கடிய குளிரை

விரட்டும் யத்தனத்தில்

தோல்வியை ஏற்க மறுக்கும்

தேசத்தின் கொடியென – காற்றில்

படபடப்புடன் அசைகிறது.

சிதறும் மஞ்சள் வெளிச்சத்தில்

உன் முகம் துளியும்

விசனமற்று இருக்கிறது

என் தவிப்பைப் பற்றிய

எந்த உணர்தலுமின்றி.

கடல்நாய்கள் நீந்தும்

பனிக்கடலின் பாறையென

நான் அவ்வளவு சில்லிட்டிருக்கிறேன்.

நீ கொண்டு வந்திருக்கும்

இந்தச் சின்னஞ்சிறிய நெருப்பு

எனக்குக் கொஞ்சம் கூட போதவில்லை.

அறை வாசலிலேயே நீ நிற்பது

வெளி செல்வதற்கா

மீண்டும் உள் நுழைவதற்கா என

எவ்வளவு நேரம் உற்று நோக்குவது?!

கரைந்து கொண்டே இருந்தாலும்

உனதிந்த தேன் மெழுகு

எனக்காக உருகுவது இல்லை.

நழுவும் பிடி


​எப்போதும் போல் – வெகுநேரம்

காத்திருக்க நேர்ந்து விட்டது இன்றும்.

பிடிமானமற்ற பாலத்தின் மேல் நின்று

மங்கிக் கொண்டிருக்கும் மாலை ஒளியில்

இருபுறமும் குமுறியபடி புரண்டோடும்

நீரின் பிரவாகத்தைப் பார்த்தபடி இருக்கிறேன்.

வறுத்த கடலையும் இஞ்சித் தேநீரும்

விற்பவர்கள் – வெற்றுப் பார்வையுடன்

கடந்து செல்கிறார்கள்.

வந்து நாழியாயிற்றா என்கிறாய்.

அரைமனது ஆலிங்கனங்களில்

அர்த்தமென எதுவும் இல்லை.

உடனே அங்கிருந்து அகன்றிடும்

எண்ணம் வலுப்பெறத் துவங்குகிறது.

வெண்நுரை பொங்கப் பாய்ந்து செல்லும்

அடையாற்றின் வேகத்தில்

எந்தக் கவலையுமற்று நகர்கிறது

கறுப்பு அன்னங்களின் ஊர்வலமொன்று.

ஆழ்

 

​முற்றிலும் காலி செய்து

புறக்கணிக்கப்பட்ட ஒரு சிற்றூரின்

புறத்தே ஓடும்

செம்பழுப்பு நதி போல

வெளியேறிக் கொண்டிருக்கிறது

என் உடலில் இருந்து

ஒரு முதிராத கனவின் முடிவு.

குளியலறை எங்கும்

இரும்பின் வாசம் – வியாபித்து

இருப்பதாய்ச் சொல்கிறாய்.

அடர்ந்த இருளின் கதகதப்பில்

கண்கள் மூடி உறங்கிப் போகலாம்

ஓர் ஆக்டோபஸாய் மாறிப்

பிறவாத என் குழந்தைகளை

பிறந்தும் உடனிலாத என் சிசுக்களை

எட்டு கரங்கள் நீட்டி

விரித்து வளைத்து அணைத்தபடி.

நேற்று – விடிந்து விட்டது

என்று எழுப்பியது போல்

நாளையும் செய்து விடாதே.

இப்போதெலாம் முடிவின்றித் தொடர்ந்தபடி

இருக்கும் கனவுகளில் எல்லாம்

கரையில் துள்ளும் குஞ்சு மீன்களைக்

கடலில் சேர்த்தபடி இருக்கிறேன்.

தனி

 

​சேற்று வயலில் இரையெடுத்துக் கொண்டு

அந்தி வானில் மறையும்

வெண்கொக்கு கூட – ஏனோ

உன்னைத் தான் நினைவு படுத்துகிறது.

இதோ இந்த மனோரஞ்சித மரத்தடியில்

தனியே நிற்கும் எனக்கு

மாறிக் கொண்டேயிருக்கும்

இம்மலர்களின் வாசத்தைத் தவிர

வேறு துணையென்று ஏதுமில்லை.

கவியும் இவ்விரவு

வெறுமையான நத்தைக் கூடென

அவ்வளவு துயர் மிகுந்ததாக இருக்கிறது.

பற்பல வலசைப் பருவங்களுக்கு

முன் நிகழ்ந்த ஒரு கலவியை

எத்தனை காலத்திற்குத் தான்

துணை கொள்ள முடியும்…?!

நள்ளிரவில் பசியோடு அலறும்

அடர்வனத்துக் கொற்றவைக்கும்

குருதிப்பலியிட்டு வெகு நாட்களாயிற்று.

சிடுக்கு

 

​மொட்டை மாடியில் உலாத்தியபடி

அலைபேசியில் மணிக்கணக்கில்

கதைப்பவனை – படுக்கையறையில்

வைத்திருக்கிறாள் கீச்சிடும்

ஓர் ஆப்பிரிக்க கிளியாக்கி.

​வெண்பூக்கள் தலை நிறைய உதிர

வேம்படியில் காத்திருப்பவன்

இப்போது வரவேற்பறை மேசையில்

உடலெங்கும் பிங்க் பூக்கள் பூத்திருக்கும்

காக்டஸ் தொட்டிச் செடி.

​புல்லட் வண்டியில்

அரைக்கால் சட்டையுடன்

பல ஊர்கள் பயணிக்கும்

நவீன யாத்ரீக காதலன்

ஞாபக மறதி கொண்ட

தங்க மீனாக

உருள் வடிவ ஜாடியில்

இலக்கின்றிச் சதா சுற்றிபடி.

​பணியிடத்தில் கள்ளமாய்ச் சிரித்து

காஃபிக்கு அழைத்தவனைச்

சாட்டின் இரவுடை போல்

மெத்தென்ற உடல் கொண்ட

பூனையாக மாற்றி விட

அது அவள் கால்களை உரசியபடி

தன் கால்களை நக்கிக் கொண்டிருக்கிறது.

​திருமண வலைத்தள

சுயவிவரப் பக்கத்தில்

அவள் ஜீவகாருண்யத்தை மெச்சி

நேசித்து மணந்தவனை

இன்னமும் அவனாகவே

வைத்திருக்க நேர்ந்தது குறித்து

மிகுந்த குழப்பம் இருக்கிறது

அவளிடம்.

இரவைத் தனியே இருக்க அனுமதி


இன்று மட்டும் விட்டு விடு

இந்த இரவை

அது தனித்து இருக்கட்டும்

தேற்ற முடியாத ஒரு துயரத்தைப் போல

இலையுதிர் பருவத்தின் கடைசி இலை போல

அது தானே தனித்திருக்கட்டும்

உடன் இருக்கும் முயற்சியில் அதற்கு

மேலும் பாதுகாப்பின்மையை உண்டாக்குகிறாய்

வலிமையற்ற இரவு எல்லாவற்றையும்

சிறிதும் தர்க்கமின்றி ஏற்கவே செய்யும்

போட்டியாளற்ற மல்யுத்த வீரனின்

அர்த்தமற்ற ஒரு அற்ப வெற்றியை 

அடைய விரும்பாத பட்சத்தில் இந்த

இரவைத் தனியே இருக்க அனுமதி

உன் கையிலிருக்கும் சிறு விளக்கும்

அதை அமைதியிழக்கச் செய்வதை கவனி

தன்னைத் தொலைக்கும் கடும் இருளுக்கு

மட்டுமே ஏங்கும் நீண்ட இவ்விரவை

முக்கியமாக ஈரமான கடற்காற்றையோ

கடற்கரை மணல் ஒட்டிய பாதங்களையோ

தவறியும் கூட நெருங்க விடாதே.

ஓயாத அலைகள் கொண்ட கரிய கடலை

தன் இருப்பை அச்சுறுத்தும் மாற்றுப்பிரதியென

எண்ணி அது மிகுந்த குழப்பம் கொள்கிறது

இந்த இரவை மட்டும் 

கடந்து விட முடிந்தால் போதும் 

தொடரும் பகல் எல்லாவற்றையும்

துடைத்து விடும் முற்றிலுமாக

அதன் பின்னர் பகலுக்கு

கடல் ஒரு பெரும் சிறகுலர்த்தும் காகம் மட்டுமே 


அரூப முத்து

 ஒரு மாதுளம்பழம் பிரியத்துக்குரியவர்களை

உனக்கு நினைவூட்டுவதாய் சொல்வாய்

தொலைவிலிருந்து பசியாற்றும் திறன் - அதற்கு

உண்டெனும் உனது நம்பிக்கைகள்

இப்போதும் உண்மையா?

நான் ஒரு மாதுளையைப் பிளக்கிறேன்

உன்னைப் பற்றிய நினைவுகள் சிதறுகின்றன 

கழுவிட முடியாத உதிரக் கறையென

இருகைகளிலும் பரவுகிறது இளங்கனியின் சாறு

இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை

இறுதி சந்திப்பின் போது - நம்

உணவு மேசையிலிருந்து களவு போய்விட்ட

அரூபமான

சிவந்த

ஒற்றை

மாதுளை நல் முத்து !


கறுக்கும் தேநீர்

சூரியன் ஒரு பெரிய எலுமிச்சையென நீருக்குள் மூழ்குகிறது

அந்தியின் அலைகள் பொன்னிறத்தில் உன்னைக் கிறங்கடிக்கும்

உலகின் மிகப்பெரிய குவளையில் தளும்புகிறது லெமன் டீ

என்கிறாய்

நேரம் செல்லச் செல்ல ஆறிக்கொண்டே இருக்கிறது

நீயும் அருந்தாத நானும் பருகாத

கறுத்துக் கொண்டிருக்கும் இவ்வளவு ‘தேநீரை’

எந்த கடலில் போய் கொட்டுவது?


என்று..

உன் நிர்வாணம்

உன்னை ஏன்

இவ்வளவு பயமுறுத்துகிறது?

அந்தரங்கமாக குளியலறையில்

மேலெங்கும் நீர் வழிகையில்

குளிரான குற்றவுணர்வின் ஈரத்தில்

உன் கண்ணீரின் வெதுவெதுப்பு கலக்கிறது

அறுவை சிகிச்சை மேசையில் படுத்தபடி

ஆடைகள் அனைத்தையும்

களைந்து விட வேண்டாமென

மீண்டும் மீண்டும் இறைஞ்சுகிறாய்

உன் வஸ்திரங்கள் அனைத்தும்

உன் உடலின் அடர்வாசத்தை

காற்றெங்கும் நிரப்புகின்றன

ஒரு கலவியின் துவக்கத்தில்

உன்னால் கைவிடப்பட முடியாத

உடைகளை வைத்துக் கொண்டு

என்ன செய்வதென்று தடுமாறுகிறாய்

நான் அறிந்து கொள்கிறேன்

உன் உடலை அல்லாது

நீ வேறு எதற்கோ அஞ்சுகிறாய் என்று

வேறு எதையோ மறைக்க விரும்புகிறாய் என்று


டல்ஹௌஸியின் ஆரஞ்சு இரவு

நீ வசிக்கும் பனி உறைந்த மலை சரிவுகளில்

மோன அலைகளாய் இறங்கி வரும் மேகங்களென

விரைந்து ஆக்ரமிக்கின்றன உன் நினைவுகள்

இப்பின்னிரவில் உன் குரல் எங்கிருந்தோ

சொல்ல முடியாதொரு இரகசியமென கசிகின்றது

வெளியே அமைதியாய் கண்சிமிட்டும் நட்சத்திரங்களையும்

நீர்துளிகள் உறையும் டியோடார் மரத்தின் மௌனத்தையும்

பகிர்ந்து கொள்வதற்கு அப்பால் வேறெதையும்

அனுமதிக்க முடிவதில்லை உன்னால்

இந்த அறைக்குள் உஷ்ணம் கூட்டும்

ஆரஞ்சு வெளிச்சத்தை நோக்கி ஈர்க்கப்படும்

விட்டில்களின் இறகுகள் நாளைக் காலை உதிர்ந்திருக்கும்

பேரொளி பற்றிய ஏக்கங்களின் மிச்சமாய்

என்னுடன் குளிர் படுத்துறங்கும் கம்பளிக்குள்

ஒரு நீர்த்திவலையென உருள்கிறது

உன் பழுப்பு நிறக் கண்களின் பிம்பம்

அடர்ந்து சுருளும் உன் முடிக்கற்றைகள்

நினைவுபடுத்தும் செம்மறியாட்டுக் கூட்டங்களை

எண்ணிக் கொண்டு இமைகள் மூடுகிறேன்

மெல்ல துயில முயலும் விழித்திரைகள் கிழித்து

ஆரவாரமாய் உள் நுழைகிறது

மதநீர் ஒழுகும் யானைகளின் பிளிறல்களால்

அதிர்ந்திடும் ஓர் இருள் கானகம்


(டல்ஹௌஸி - ஹிமாசல்பிரதேசத்தின் ஒரு குளிர் நகரம்)


வருகை

 உப்பு கரிக்கத் துவங்கிய தேநீருடன்

நான் அமர்ந்திருந்த அந்த முன்னிரவில் தான்

எனைத் தேடி வந்திருந்தாய் நீ

வேட்டையாடப்பட்ட ஒரு சிறு மிருகத்தின் 

நிராதரவான உறைந்த கண்களுடன்

கொடிய புறக்கணிப்பின் இரணம் - உன்

உடலெங்கும் தகித்துக் கொண்டிருந்தது

என் தேநீர்க் குவளையை நான்

உன்னிடமிருந்து மறைக்க விரும்பினேன்

என் சமையலறைக் குழாயினின்று

சொட்டிக் கொண்டிருந்த நீரின் - ஒரு

துளியளவு கருணையே வேண்டியிருந்தது

இந்த உலகிடமிருந்து உனக்கு

நீயறியாமல் இரகசியமாய் என் உடலின்

அத்தனை வடுக்களையும் தடவிக் கொண்டேன்

உன் நம்பிக்கைகளை அதற்குப் பின்னும்

நான் சிதைக்க விரும்பவில்லை

துரோகத்தின் நீண்ட நிழல்கள்

துரத்தும் பகல்களைக் கடந்தே

இந்த நிழல்களற்ற மாலையை

அடைய முடிந்தது என்றாய்

மறுநாளில் திரும்பப் போகும்

என்னைத் தொடரும் நிழல்களை

நீ அறியும் முன் உன்னை

வெளியேற்றி விடுவதென தீர்மானித்தேன்

பிரார்த்திக்க ஒரு கடவுளின் சித்திரம்

வேண்டுமென நீ நிர்பந்தித்த போது 

என் எல்லா கடவுளர் படங்களின்

சாம்பல் நிறைந்த கலயத்தை நிலவறையினின்று

தூசு துடைத்துக் காட்டவே வேண்டியிருந்தது

உன்னுடைய சந்தேகங்கள் அப்போது

தோன்ற ஆரம்பித்திருக்க வேண்டும்

வெளியே உரக்க வீசத் துவங்கியிருந்த

மழைக் காற்றின் ஓலத்தில் வேறெதையுமே

கேட்க முடியவில்லையென நான்

பாவிக்கத் துவங்கியது அதற்கப்புறம் தான்


பொறுப்பற்றுப் பறக்கும் தட்டான்கள்

பால் முற்றாத கதிரின் மணத்தை

என் அறைக்குள்

நீ தான் அழைத்து வருகிறாய் 

அடுத்த முறை நீ எடுத்து வருவதாய்

வசந்த கால மலர்களின்

வாசத்தையும் கற்பனை செய்கிறேன்

அறுவடை காலம் எதிர்நோக்கி

முற்றத்தில் காத்திருக்கும்

துருவேறும் அரிவாள்கள்

விளைச்சல் நிலங்கள் இருக்கும் திசையில்

வரப்புகள் உடைக்கும் பெருமழையின்

ஆரவார ஒலி கேட்கத் தொடங்குகிறது

தவறான பருவங்களில் பொழியச் செய்வதற்கெனவே

என் வயல்வெளிகளில் எப்போதும்  

பொறுப்பற்றுப் பறக்கின்றன தட்டான்கள்.

யட்சி

*பாறைகளில் அமர்ந்து தலைசீவும் 

கடற்கன்னிகள் அறிவதில்லை

அலைகள் புரளும் கருங்கடல்

யட்சியின் கூந்தல் தான் என


*யட்சி இருள் கானகம் நடுவே

கண்கள் கிறங்கி காற்றை முத்தமிடுகிறாள்

வனத்தின் மொட்டுகளில் நிரம்பித் ததும்புகிறது

அவள் இதழ்களின் தேன்


*யட்சி காமத்தின் மலர்க்கணைகள் ஏந்தி

உலவுகிறாள் யௌவனத்தின் சாலையெங்கும்

காண்பவருக்கு அவளே ஒரு மலர்க்கணையென

கந்தர்வன் சொல்லுகிறான்


*அனல் மூட்ட எண்ணி

சுள்ளிகளுக்கு நெருப்பிடுகிறாள் யட்சி

அவள் தேகத்தின் குளிரில்

தோற்று தோற்று அணைகிறது தீ!


*நீரை விட்டு வெளியேறுகிறாள் யட்சி

சிறகுகளின் சலசலப்பு அடங்க

வெகு நேரம் ஆகிறது 

பறவைகளற்ற அத்தீவின் குளத்தில்


*யட்சி தன் காசுமாலையின் - ஒரு

பொற்காசை மேலே வீசியெறிகிறாள்

பின்னிரவு வானில் மஞ்சள் நிலவென

உருகி வழிகிறது அது


*கரமுயர்த்தி சோம்பல் முறிக்கிறாள் யட்சி

அவள் கைவிரல்களில் இறங்கி

கால் நகங்களில் கசியும் வானம்

நீலமாக்குகிறது அவள் நீந்தும் நதியை


*கடல் அலைகள் மேல் 

ஊர்த்துவம் ஆடுகிறாள் யட்சி

பூமியெங்கும் பெய்கிறது

ஓர் உப்பு மழை


*மோகத்தின் விடம் தலைக்கேறி

நீலமாகிறது - யட்சியைத் தீண்டிய சர்ப்பம்

அமைதியாக உறங்குகிறாள் யட்சி


*ஞானத்தின் ஆப்பிளை சுவைக்கும் யட்சி

பரி நிர்வாணம் அடைகிறாள்

சகல ஆடைகளையும் களைந்து


*சிகை கற்றைகள் கிளைத்து விரிய

தவமிருக்கும் யட்சி விருட்சமாகிறாள்

வலசை போகும் பறவைகளுக்கு


*இன்னதென்று வயதறிய முடியா யட்சிக்கு

முளைக்கின்றன ஒவ்வொரு வருடமும்

வெண்மையான பால் பற்கள்


கரை ஒதுங்காமை

 ஒரு சின்ன திடுக்கிடலோடு தான்

எதிர்கொள்ள வேண்டியிருந்தது நாம்

கருநீல அலைகள் நம் காலடியில் அதை

சிறு எள்ளலுடன் கொண்டு சேர்த்த போது

கனத்த ஓட்டிற்குக் கீழ் பிதுங்கிய

உப்பு நீரில் உப்பிய உடல்

பெருகும் இருளில் வெளிறிக் கொண்டிருந்தது

இனி எத்திசைக்கும் பயனிலாத

துடுப்புக் கால்கள் துவண்டு விட்டிருந்தன

அசைவற்ற அதன் கண்களுக்காய்

ஒரு துளி கண்ணீர் திரள்கையில்

என் கரங்களை அழுத்தமாகப் பற்றிக் கொள்கிறாய்

தன்னுடன் புன்னகையுடன் புகைப்படம்

எடுத்துக் கொள்கிறவர்களை பற்றிய

எந்தப் பிரக்ஞையுமற்று முற்றிலுமாய்

மரணித்து விட்டிருக்கிறது அது

எடை கூடிய எதுவாயினும் உயிரற்றதும்

கடல் கரை ஒதுக்கி விடும் என்கிறாய்

முன்னமே சொல்லியிருக்கலாம் நீ

சற்று முன்பு தான் நம்மைப் பற்றிய

நிறைவேறாத கனவுகளை

நடுக்கடலுக்கு அனுப்பி விட்டிருந்தேன்

உன் விரல்களுக்கிடையில் என் உள்ளங்கை

வியர்க்கத் துவங்குகிறது

இந்த அப்பாவிக் கடல் ஆமை போல்

நாளை கரை ஒதுங்காதிருக்கட்டும் அவை   


கையறு துளிகள்


நீல ஒளி ஆக்கிரமித்திருக்கும் உன் அறையில்

​யாருமற்ற ஒரு விளையாட்டுத் திடலின்

பார்வையாளனைப் போல் அமர்ந்திருக்கிறேன்.

இப்பொன்னிற மதுவை அருந்துவது

சூரிய வெளிச்சத்தை உட்கொள்வது போலெனக்

கபடமிலாப் புன்னகையுடன் நைச்சியமாய்த் தூண்டுகிறாய்.

ஐஸ் துண்டங்களின் சில்லிட்ட பரப்பின் மேல்

அழுத்தமாய் உறைந்திருக்கிறது என் மோகம்.

கண்காணிப்புச் சிறிது தளர்ந்த பொழுதில்

திரைச்சீலைகள் பின்னிருந்து நெளிகின்றன

ஒளிக்கப்பட்ட நம் வரையறையற்ற ஆசைகள்.

உன் கைகளில் நிரம்பியபடி இருக்கும்

வெளிப்புறம் வியர்த்த கண்ணாடிக் குவளையினுள்

மெதுவாய் உருகத் துவங்குகின்றன ஐஸ்கட்டிகள்.

நீ துளித் துளியாய் அருந்திக் கொண்டிருப்பது

மதுவை மட்டும் அல்ல என்கிறாய்.

பற்றவைக்கப்படாத சிகரெட் ஒன்று

முறுக்கேறும் என் நரம்புகளுக்குள்

வன்மமாயப் புகைந்து செல்கிறது.


ஆயுதம்

 முள்வேலிகளே கதவுகளாகக் கொண்ட

உன் வீட்டிலிருந்து நீங்கி வரும்

நீண்ட இச்சாலையின் இருபுறமும்

உறைந்த உதிரத் துளிகளென

இறைந்து கிடக்கின்றன சிவந்த பூக்கள்

கரை தட்டி நிற்கும் கைவிடப்பட்ட

கப்பலொன்றின் மேல் அடர்ந்த பாசியென

இப்பயணத்துப் பிரிவின் புழுதி

அகற்ற முடியாது அப்பிக் கிடக்கிறது

முத்தத்தின் ஈரம் காய்ந்த என் உடலெங்கும்

இந்த பருவத்தில் பொய்த்த மழை

எதிர்வரும் காலத்தில் அதன் வாக்குறுதிகளை 

நிறைவேற்றும் சாத்தியமறியா துயரங்களுடன்

விட்டுச் செல்கிறேன் உன் வன்புலத்தை

அனுமதி மறுக்கப்பட்ட பாதைகளின் மேல்

சிறகு விரிக்கும் வேறு நிலத்து பறவையொன்று

சேர்த்து வைத்திருக்கும் தன் கனவுகளின்

இனிமை குறித்துப் பாடத் தொடங்குகையில்

என் உடலே திரண்டெழுந்து நிற்கிறது

எனக்கெதிரான ஒரு கொடும் ஆயுதமாய்


புதிய மொழி

அன்றைய இறுதி சந்திப்பில் நாம்

வேறொரு மொழியில் பேசினோம்

வழக்கமான நம் உரையாடலின்

நிச்சயமின்மையின் சுவடுகள் அழுந்தாத

கிளர்ச்சியின் இரேகைகள் கோடிடாத 

ஓர் அந்நிய மொழி


பரஸ்பர அறிதல்களின் நெருக்கத்தை

அந்தரங்களில் கனலும் வெப்பத்தை

நிரப்பிக் கொள்ளாத மொழியொன்றில்


யாரோ ஒருவர் வேறொருவருக்காக

வனைந்திருந்த மொழியை - அதன்

அச்சின் சுழலிலிருந்து அபகரித்த

மேதைமையுடனும் சூதுடனும்


முன்பு ஒருபோதும் உச்சரித்திடாத

பின் நம்மால் ஒருபோதும்

பேசப்படாத மொழி


பனிக்குடத்திலிருந்து வெளியேறும் சிசு

வெதுவெதுப்பான நீரில்

பிரசவிக்கப்படுவதைப் போல் - நம்

ஆன்மாக்களை பிணைத்த முடிச்சுகள்

குருதி வழிய அறுத்தெறியப் படுவதை

அறியாமல் இருக்க - அந்தப்

புதிய மொழியின் கதகதப்பான

அடுக்குகளை போர்த்திக் கொண்டோம்

ஈரம் உறிஞ்சும் ஒரு கம்பளியென


அந்த நாள் நம் விலகலின்

முதல் நாளாக இருந்தது

அன்று நாம் பேசிய மொழியும்


நிழல் மயக்கம்

 பட்டியில் உறங்கும் மறிகள்

திடுக்கிட்டு விழிக்கின்றன

கழி ஏந்தி நிற்கும் - கறுத்த

இடையனின் வலுத்த அழைப்பில்!

வெண்கதிர் எழாத - நிழல் விழத்

துவங்காத குளிர்காலையில்

பின்தொடர்ந்து செல்கிறான் அவன்

ரோமம் அடர்ந்திருக்கும் - தன்

செம்மறிகளின் கூட்டத்தை முன் இட்டு!

பசும் புல்வெளிகளில் மேய்ச்சலிட்டு

தெளிநீர் ஓடும் ஓடைகளின் கரையோரம்

கடந்து செல்கிறான் ஒரு கடிய நாளை!

அவன் உலுக்கி உதிர்த்த

கருவேலங் காய்களைப் புறக்கணித்து

சாயும் பரிதியை பருகத் துவங்குகின்றன

மறிகள் தம் கரும்பளிங்கு கண்களால்!

கழியில் முகம் தாங்கி கண்ணயரும்

பின் மாலையின் மயங்கிய பொழுதில்

திடீரென விழித்து திடுக்கிடுகிறான் இடையன்

தன் நிழல் - ஒரு மறியின்

உருவாய் மாற்றம் கொள்வது கண்டு!


இடைவெளி


​எவ்வளவு காலியாக இருக்கின்றன

உன் தேநீர்க் கோப்பைகள்!

ஒளி ஊடுருவும் பச்சையில் – அவ்வளவு

வெறுமையால் நிறைந்திருக்கின்றன

உன் வடிவான மதுக்குப்பிகள்.

பற்கள் கடித்து நீ கடக்க முயலும்

உன் தேம்புதலின் அழுத்தம்

ஒரு கருத்த தேமலென

என் மேல் அடர்ந்து படர்கிறது.

சுவற்றின் மீது தவித்து அலையும்

சுடரின் நிழலை

எவ்வளவு நேரம் தான் பார்த்துக் கொண்டிருப்பது?

ஆளில்லா வீட்டின் மாடிப்படி வளைவில்

சின்னஞ்சிறு கால்களால்

அணைத்துக் கொண்டு உறங்கும்

இன்று பிறந்த நாய்க்குட்டிகளைப் போல

நாம் இந்த இரவில் இருக்கலாம் தானே?!

மாதொரு பாகனை?

 பார் மெச்சும் மீனாட்சியின் மூக்குத்தி மீதல்ல

கொலுசுகள் மீதே வாஞ்சை அதிகம் உனக்கு

பரல்கள் சிதறிவிடக் கூடுமென எங்கேயும்

அசைய அனுமதிப்பதில்லை நீ அவளை

உன் ஊருக்கும் சிலம்புகளுக்கும்

ஏற்கனவே ஏழாம் பொருத்தம்

கொலுசுகள் பேச்சற்றுப் போனது

நாவு துண்டிக்கப்பட்டது போலென

பொற்றாமரைக் குளத்திடம் தேம்புகிறாள் அவள்

ஊர் எல்லைக் காவலில் சற்று நீ கண்ணயருகையில்

வெற்றுக் கால்களுடன் வறண்ட நதிப்படுகை

தாண்டி தளர்ந்து செல்கிறாள் மீனாட்சி

என்ன சொல்லி சமாதானப்படுத்துவாய்

செய்வதறியாது திகைத்து நிற்கும்

மாதொரு பாகனை..

மயக்கம்

தனித்த ஒரு தீவில் நின்று

என் கவனத்தை வைத்திருக்கிறேன்

துடுப்புகளின் சுழற்சியில்

உண்டாகும் சிற்றலைகளின் மேல்

துள்ளும் குறு மீன்கள் மீது

நிலவொளி கொண்டு மீன் பிடிப்பவன்

மறுகரையில் வசிப்பதாக அறிவிக்கிறார்கள்

மாநதியை சிறு கலத்தில் கடப்பவர்கள்

அவனுடன் நிச்சலன மீன்கள்

கரையேகும் நாள் நோக்கி

அணையாது பாதுகாக்கிறேன்

காய்ந்த சுள்ளிகள் கொண்டு

சிறு நெருப்பு ஒன்றை

பல முழு நிலவுகளுக்கு பின்னரான

ஒரு நிலவில் - புன்னை மரங்களின்

இருள் காற்றை கிழித்துக் கொண்டு

என்னை வந்தடைந்தவன் காமத்தின்

ஒளி பெருக அணைத்த பொழுது 

அவன் விழிகளிலிருந்து துள்ளி 

சிதைக்குள் குதித்தன இரு வெள்ளி மீன்கள்

அவன் அண்மையின் வெப்பத்திலும்

கனலும் நெருப்பின் புகையினின்றும்

கமழ்ந்து ஆட்கொள்கின்றது என்னை

அமிழ்ந்த நீர் செடிகளின்

அடர்ந்த கவிச்சி மணம்


அனல் நதி மீன்கள்


​ஒரு கவிதையை அணுகும் போது

ஒரு காதலை அணுகும் பதட்டத்தை

எனக்கு நீயே அளிக்கிறாய்.

எரிமலைப் பிரதேசத்தில் யுகங்களாய்

சமைந்திருக்கும் – ஒரு

அனற்பாறையின் இறுக்கத்தோடு

மௌனித்து இருக்கிறேன் – இதோ

இந்தக் கார்த்திகை மாத முடிவில்

பூக்க வழியில்லாத

கண்ணுப்பீளை மலர்களை

இப்போது தேடுவதில் பயனுள்ளதா?

காலம் ஒரு பிடாரனின்

கையிலிருந்து நழுவி நழுவிச் செல்லும்

கட்டுவிரியன் பாம்பென நகர்கிறது.

எனக்குள்ளே ஓடும் நதியிலிருந்து

வெளியே துள்ளும் மீன்களை

என்னதான் செய்வது நான்?

நிரம்பும் வெளி

நீ சொன்னது போலவே

இடைவெளிகள் தேவையானவை

இடைவெளிகள் இனிமையானவை!


இடைவெளி இல்லாது போகும் கணத்திற்கான

தகிப்பை இருவருக்கும் உணர்த்துபவை!


எனக்குள் உன் நிகழ்வையும்

உனக்குள் என் இருப்பையும்

நிச்சயம் செய்பவை..!

 

ஆம்,நீ சொன்னது போலவே..

 

எனினும்..

 

உனக்கும் எனக்கும் இடையில் - வலிய

நாம் ஏற்படுத்திக் கொண்ட இவ்வெளி


அனலில் முறியும் கருவேலங் கிளையினின்று

வழியும் பிசினென அடர்ந்து பிசுபிசுக்கும்

இருள் கவியும் - இப்புலனழி மாலையில்

 

வேறொன்றும் தந்துவிடவில்லை எனக்கு..!

 

இட்டு நிரப்ப கொஞ்சம் மௌனத்தையும்

ஒரு கவிதையையும் தவிர.


என் ஓவியம்

புலரியில் வரையத் துவங்குகிறேன்

புதிய ஓவியம் ஒன்றை

சூரிய வெளிச்சத்தின் வெவ்வேறு வண்ணங்கள்

இழை பிரித்து நிறைக்கிறேன் கித்தானை

பிராகசத்தில் கண்கள் கூசுவதைப் புறக்கணித்து

தொடர்ந்து தீட்டுகிறேன்

வரையாடுகள் ஒரு நாளின் மேய்ச்சல் முடிந்து

மலைசரிவில் இறங்குகையில்

நிறைவு பெறுகிறது ஓவியம்

அடர்ந்த சிவப்பு அங்கிகள் அணிந்த

இளம் புத்த பிட்சுகள் தங்கள்

சிறு விளக்குகளுடன் மடத்துக்கு 

மிச்ச வெளிச்சத்தையும் அழைத்து கொண்டு செல்கையில் 

என் ஓவியம் நிறங்கள் தொலைத்து

மங்க துவங்குகிறது