எரியும்
நகரம்
வயோதிகத்தில் அந்தகனாயிருந்த தகப்பனுக்குப்
போகுமிடங்களை
விவரித்தபடி
நகருக்குள்
நுழையும் மகன்
சுற்றும்
முற்றும் வேடிக்கை பார்த்தபடி சொல்கிறான்
ஒரு
பலிமிருகம் உதிரமொழுக
எல்லா
இடங்களிலும் ஓடியது போல்
நல்ல
சிவப்பு இந்த நகரின் நிறம் என.
அந்தகன்
ஆம் என்கிறான் பதட்டத்துடன்
இருட்டான
அவன் உலகத்தில்
உக்கிரமும்
தீவிரமும் செறிந்த நகரின் ஆன்மா
செவ்வொளி பெருகித் தகிக்கச் செய்வதைக் கண்டபடி.
வேகமாய்
நதிக்குள் பாய்ந்து
கழுத்தளவு
நீரில் நின்றபடி
கைகள்
உயர்த்திக் கூவுகிறான்
ஏ…..பாகீரதி…..!
உன்
கரைகளில் நிற்கும்
தீக்கொன்றை
மரங்களையும்
ருது
கொள்ளச் செய்து விடாதே
ஏற்கனவே
தாள முடியவில்லை
இந்த
நகரின் வெம்மையை….! என.
டமரு
திரிசூலத்தின் கூர்முனைகளில் நிற்கும்
இந்நகரம்
– சதா அதிர்ந்து கொண்டிருப்பது
இரத்தம் கொதிநிலை அடையச் செய்திடும்
ஒரேயொரு
ஆதி இசைக்கு தானே!
பம் பம் பம் பம் டம டம டம் டம டம டம்
அண்டங்கள் ஜனித்து மோதிடும்
இப்பேரோசையின் தாளத்திற்கு
இடைவிடாது நில்லாது ஆடும் இவ்வுடலை
இப்போதே துறந்து விடுவது
மிக நல்லது இல்லையா... ?!
என
ஏதேதோ பிதற்றுகிறாய்
கேடகி மலரே....!
தாழம்பூவே... !
ஒன்றும்
அறிகிலேன் யான்.
நானோ….
சிவனின்
வலிய கை – இறுகப் பற்றியிருக்கும்
பேரானந்தத்தில்
எதையும்
உணராது மயங்கியிருக்கும்
இடை
குறுகிய சிறு உடுக்கை அன்றோ....!!
காசியின்
பசுக்கள்
வேறெங்கும் நிகழ்வது போலவே
இங்கும்
தெருக்களோரம் மேய்கின்றன
காசியின்
பசுக்கள்.
புனிதப்
பசுவின் சடலமொன்று
கண்கள்
திறந்தவாறு
புனித
கங்கையில் மிதந்து வந்ததை
நேற்று
மாலை கண்டதாகச் சொன்னார்கள்
காசிப்
பசுவின் காய்ந்த சாணத்தை
ஆன்லைனில்
விற்பதற்காக
சேகரித்துச் செல்கிறார்கள் - நவீன
வியாபார
நுட்பமறிந்த விற்பன்னர்கள்.
மிக
குறுகிய சாலைகளில்
கடந்து
செல்கையில்
மனிதர்கள்
மீது உடல் தேய்த்துச்
செல்லும்
அவற்றைக் கண்டு
அர்த்தநாரியின்
மகா ரிஷபம்
பெண்ணுரு
கொண்டு
பசுக்களாய் திரிகிறதென்று
கன்னத்தில்
போட்டுக் கொள்கிறார்கள்
மோட்சத்திற்கு
வந்தவர்கள்.
படகு
காட்சி
– 1
நீர் தாலாட்டியபடி இருக்கும்
பயணிகளற்ற
படகில் – படுத்தபடி
பாடுகிறான்
படகோட்டி – தன்
இறந்து
போன தாயைப் பற்றி.
அதிகாலைக்
குளிரின் நிசப்தத்தில்
பிரிவின்
சோகம் ததும்பும் அக்குரல்
துல்லியமாய்
ஒலிக்கிறது
காட்டில்
நள்ளிரவில் இழுமென விழுமொரு
சிற்றருவியின்
தனித்த பாடல் போல.
படித்துறையில்
இறங்கி நான்
கால்
நனைக்கும் முதல் நொடியில்
சில்லிடும்
நீர் – உடல்
உள்ளே
பழகப் பழக வெதுவெதுப்பாகிறது.
பனிக்குடத்தினுள்
சுழன்றதைப் போல
நீரினுள்
அமிழ்ந்து மிதக்கிறேன் பேரமைதியுடன்.
படகோட்டி
இன்னும் பாடிக் கொண்டிருக்கிறான்
மேகங்கள் சேர்ந்து கலையும் நாடகம்
பார்த்தபடி.
மூழ்கியபடி
நீந்திச் சென்று படகைக் கவிழ்க்கிறேன்
படகோட்டியே….உன்
இம்மை மறந்து வா….
நாம்
திரும்புகிறோம் நம் கருவறைகளுக்கு.
படகு
காட்சி
– 2
துடுப்புகள் நீரில் துழாவும் தாள இசையில்
உருவாகும்
நுரைச் சுழல்களில் லயித்திருக்கும்
என்
கவனம் திருப்பி
எதிர்திசையில்
நகரும் – வேறொரு
படகிலிருந்து
கையசைத்துச் செல்கிறாள்
என்னைப்
போலவே இருந்த இன்னொருத்தி…!
மறுநாள் அதே படகுகளில்
அதே இடத்தில் பார்த்துக் கொண்டோம்.
படகின் பக்கவாட்டில் திரும்பி
நீரை அள்ளி முகத்தில் அடித்தவாறு கேட்டாள்
நாம் முன்பே சந்தித்திருக்கிறோமா என.
சந்திப்பு நிகழ்ந்தது – ஆனால்
இந்த நதியில் இல்லை என்றேன்
புருவங்களிலிருந்து கண்களுக்கு இறங்கும் நீரை
துடைத்தபடி சொன்னாள்
ஆம்....சந்தித்தவர்களும் நாம் இல்லை என்று.
காலமற்ற நதி பால்வெளியில் பாய்கிறது
சகலத்தையும் பார்த்தபடி.. !
படகு
காட்சி
- 3
கங்கைக் கரையில் நடக்கும்
மாலை
நேர ஆராதனையை – நதிப்பரப்பில்
நிறுத்தப்பட்டிருக்கும் பல படகுகளிலிருந்து
தரிசித்த
ஜனத்திரள் கலைந்து செல்கிறது
கூடடையச் செல்லும் பறவைகள் போல.
எனக்கு
முன்னே நூறு படகுகள்
எனக்கு
பின்னே நூறு படகுகள்
நானிருக்கும்
படகைக் கடந்து
அடுத்த
படகிற்கு
கைகள்
பிடித்தவாறு தாவிச் செல்கின்றனர்
ஒரு
கணவனும் மனைவியும்
ஒரு
தகப்பனும் மகனும்.
நதியின்
குளிர் காற்று காதில் கிசுகிசுக்கிறது
மாயா….! அவர்கள்
கரம் பற்றிச் செல்வது
எத்தனையாவது
பிறப்பின்
எத்தனையாவது
உறவென்று அறிவாயா..? !
படகு தாண்டி படகு தாண்டி
கரையை அடைய முயல்வது போல்
பிறவி தாண்டி பிறவி தாண்டி
நீ கடக்கத் துணிவது எதை.. ? என.
சட்டென்று அறுந்து போகிறது
பாசக் கயிற்றின் பிணைப்பும் பயமும்.
நதியின் இருள் மடியில்
பூக்களுக்கு மத்தியில்
மிதந்து செல்கிறது
ஒரு தீபத்தின் சிறிய வெளிச்சமொன்று.
அகோரி காதை
குறுக்கே வெட்டப்பட்ட வஞ்சிர மீனின் துண்டங்களென
மிதக்கின்றன கங்கையின் படகுகள் என்கிறேன்
உடைந்த படகுகளென மிதக்கின்றன
இறந்த உடல்கள் என்கிறான் அகோரி.
தாள முடியாத இப்பின்பனிக்காலத்தின் மாலைக் குளிருக்கு
மரக்கட்டைகளில் கனல்மூட்டி குளிர்காயலாம்
என்கிறேன்
இது நீடித்து எரியும் நல்ல கட்டை என்று –
விறைத்திருந்த
ஓர் உடலைத் தூக்கி
நெருப்பில் எறிகிறான் அகோரி.
சிதை நெருப்பின் பிளவுண்ட நாவுகளென
தாகங் கொண்டு காற்றில் அலைவது
எரியும் உடலின் நிறைவேறா ஆசைகளா என்கிறேன்
அவை அவ்வுடலின் மீது பித்தேறி ஆடும் சிவனின்
செஞ்சடைக் கற்றைகள் அன்றோ என்கிறான் அகோரி.
கபால கிண்ணத்தில் அவன் ஊற்றிக் கொடுத்ததைச் சுவைத்தபடி
இப்பழங் கள்ளை விட தொன்மையான மது எது
என்கிறேன்
இந்த இடுகாட்டு இரவில் சோமன் சிரசில் சிந்தும் நிலவொளியை விஞ்சிய
போதை தரும் பானம் ஏதுமில்லை என்கிறான் அகோரி.
உன்னைப் போல் நான் ஆவதற்கான மார்க்கம் என்ன
என்கிறேன்
அவன் என் கையிலிருந்த பொன்வளையைக் கழற்றி
அப்போது தான் அங்கு வந்து சேர்ந்திருந்த பிணத்தின்
முன் நீட்ட
கண்கள் திறவாமல் பெரிதாய் இளிக்கிறது அது.
உனக்கும் இவனுக்கும் எப்போதும் சாத்தியமில்லை
என்று
குலுங்கி குலுங்கிச் சிரிக்கிறான் அகோரி.
உறுதியாக இலக்கை அடையும் வரை
எங்கும் நிற்கப் போவதில்லை என்கிறேன்
இந்தப் பாதையில் இலக்கு என்னவென்று - அறியாத
அறியாமையை ஏற்றுக் கொள்வது மட்டுமே
அதை நெருங்குவதற்கான ஒரே உபாயம் என்கிறான்
அகோரி.
பேச்சற்று நிற்கும் என்னை மறந்தவனாக
மயானப் புகையும் கஞ்சாப் புகையும்
சேர்ந்த கலவையின் கிறக்கத்தில்
விடாது ஊளையிடும் நரி ஒன்றை
வாஞ்சையுடன் கட்டியணத்துக் கொஞ்சியபடி
நீறு பூத்த நெருப்பின் சாம்பலில் புரள்கிறான்
அநித்யத்தை வெல்லும் சூத்திரத்தை
ஒரு மாயக் கயிறெனக் கட்டியிருக்கும் அகோரி.
மணிகர்ணிகா - 2
பிரிவாற்றாமையில்
பிதற்றுபவளைப் பேய் தேற்றும் படலம்
எதிலிருந்து எனை மீட்க அழுகிறாய்?
சிறையிலிருந்து விடுபட்டவனுக்காய்
சிரிப்பதல்லவோ தர்மம்.. !
வெளித்தாழிட்டு இறுக அடைத்தாயிற்று
ஒன்பது
வாசல்களையும்
இல்லாத
சாவிக்காக நீ முறையிட்டு என்ன பயன்.!?
நான் ஆகிவிட்ட சவம்
நீ ஆகப்போகும் சவம்
இடையில் நிற்கும் காலமெனும் மாயத்திரையை
கன்ணீர் துடைத்துக் கடந்து பார்.
ஒழுகிக் கொண்டேயிருக்கும்
உன்னுடைய ஓட்டைப் பாத்திரத்திலும்
மிஞ்சப்
போவதில்லை
அந்த
கடைசி ஒரு துளியும்.
வற்றவே
வற்றாது பிறவியெனும் பேராறு
பெருங்கடலொன்றில்
கலந்து – பின்
ஆகும்
வேறு வெறு ஆறுகளாய்
சேறடர்ந்த
காட்டெருமை மீதமர்ந்து
சிறு
தூரம் செல்லும் ஒரு புள்ளென
மரணத்தின்
முதுகின் மீது
தோன்றி
மறையும் ஒரு வாழ்வு.
வாழ்வெனும்
நெடும்பயணம் முழுதும்
எரிமருந்து
தடவிய திரியெனக்
கனன்றபடி
வரும் மரணத்தின் கங்குகள்
பாதை
முடிகையில் வெடித்துச் சிதறுமன்றோ.!
அடுப்பிலிருந்து
பழைய சாம்பலை அகற்றி
புதிய
விறகுகளை மூட்டுவது போல்
மிச்சமிருக்கும்
நாட்களைக் கடத்த – வழக்கம் போல்
வேறு
கவலைகளை எரிக்கத் துவங்கு.
புதிர் தெருக்கள்
காட்சி – 1
புதிர்நெறிப் பாதைகளில் - வெளியேறும் வழி தேடி
ஓடி
ஓடி அலையும் சிறு எலியைப் போல
சந்திகளில்
சேர்ந்து – பின்
கிளைத்து
கிளைத்து பிரியும்
காசி
நகரின் தெருக்களினூடே
சாதகி
கண்டடைய முயல்கிறாள்
அரிதான
ஞானத்தின் வாயிலை.
கூப்பிடும்
குரலுக்குத் துள்ளி வரக் காத்திருக்கும்
வாசலில்
படுத்திருக்கும் வளர்ப்புப்
பிராணியைப்
போல்
முனகுவது
சிறிதும் கேட்காதபடி – அமைதியாக
உடலுக்கு
வெளியே நிற்கிறது அவள் மனம்.
தீவிரமான
யோகத்தின் உச்சத்தில்
நாசியின்
நுனியில் மட்டுமே அசைவுறும்
சுவாசத்தின்
தீர்க்கத்துடன்
நகருக்குள்
திரியும் அவளை
கண்டவர்களின்
முகங்களில்
ஒன்றைக் கூட ஏறிட்டுப் பார்க்கவில்லை சாதகி.
மிகுந்த
பிரயாசையுடன் அவள் காண விரும்பியதெல்லாம்
நீண்டு
– அகலம் குறுகிய வீதிகளின்
வியூகம்
போன்ற பின்னல்களில்
தனக்கான
விடுதலையைத் தரவல்ல
ஒரு
திருப்பத்தின் திறப்பை மட்டுமே.
புதிர் தெருக்கள்
காட்சி – 2
தெருக்களெங்கும் சித்திரங்கள் வரையப்பட்ட
விசித்திர நகருக்கு முதன்முறை வரும் யோகினி
ஊர் முழுக்க வலம் வந்தது
அப்புராதன நகரின் வயதே தனக்கும் என்ற
ஒரு சமத்காரச் சைத்ரிகனுடன் தான்.
வண்ணங்கள் குழைக்கும் தட்டை கேடயம் போலவும்
விதவிதமான தூரிகைகளை அம்புகளைப் போல
தன் அம்பறாத் தூணியில் அணிந்த அவன்
ஒரு மென்மையான போர்வீரன் என்கிறாள் யோகினி.
ஊர் உறங்கும் இரவுகளில்
நகரின் சுவர்களில் வழிநெடுக
பிரகாசமான ஓவியங்களைத் தொடர்களாக
வரைந்து
செல்லும் அவனை
ஒரு
தேன்சிட்டின் வடிவு கொண்டு பின் தொடரும் யோகினி
அவிழ்க்க
முயல்கிறாள் - கோடுகளிலும் வளைவுகளிலும்
அவன்
ஒளித்து வைக்கும் புதிர்க் கதைகளை.
குளிர்புலரியில்
எழுகின்ற கதிரால்
கங்கை
நீரில் தோன்றும் பல்நிற ஜாலங்கள் போன்று
தீட்டுவதற்கு சாத்தியமற்றது வேறேதுமில்லை என்பவனிடம்
நீண்டு
புரளும் கட்டுக்கடங்காத தன் கரிய கூந்தல் சரிவு முழுதும்
மயிற்பீலியின்
ஒளிமிகு வர்ணங்களைப் பிரதிபலிக்கச் சொல்கிறாள்
சவாலான
புன்னகையுடன் யோகினி.
தீ
நின்ற பாதம்
இட்ட அடி நோக
எடுத்த
அடி கொப்பளிக்க
நடக்கின்ற
நிலம் யாவும்
பொசுங்கிக் கருக
அறுதியான
பொருள் தேடித்
தட்டழியும்
தடமெங்கும்
ஒரு
கணமேனும் எங்கும்
எனை
நிற்க விடாத
தீ
நின்ற பாதம் எனக்கு.
.
அடி
தொற்றி
ஒரு
கொடி போல் சுற்றி
மேலேறி
முடி வரை செல்லும்
தன்னை
அழிக்கும் அக்னியைத்
தானே
சுமந்து திரியும்
பித்தர்
கூட்டம் பின் தொடரும்
நீர்மை
நின்ற பாதத்து* ஈசா…
உனை
அறிந்த போதிலும் அணையாத
தீ
நின்ற பாதம் எனக்கு.
*-சிவவாக்கியர்
சொல்லும் பாதம்
அன்னபூரணி
கொங்கைகள் மீது
கபால
மாலை மோத
தாண்டவம்
ஆடும் காளியை
மலிவான
ஊர்த்துவத்தில்
வெல்கிறான்
சிவன்
ஏமாற்றத்தின்
உக்கிரம் உச்சமேறப்
பக்கவாட்டில்
சுண்ணாம்பு தடவப்பட்ட
கரிய
எலுமிச்சைகளென
உருள்கின்றன
காளியின் கண்கள்
மஞ்சள்
சரக்கொன்றை மாலையைப் பிய்த்தெறிந்து
தரையில்
வீழ்த்தி – அவன்
மீது
ஏறி அமர்கிறாள்
தாந்திரீகத்தின்
ஆதி தலைவி.
ஒரு
கை அன்னத்திற்காக
அவள்
வாசலில் பிச்சையோடு ஏந்தித்
காத்திருந்தது
நினைவிற்கு வர
சவமாய்
அடங்குகிறான் சிவன்.
ஒன்றா…..வேறா….?
இந்த விளக்கின் நுனியில்
நின்று எரிந்திருக்கிறேன்
எண்ணற்ற முறைகள்.
தொடர்ந்து எண்ணெய் ஊற்றி...
திரியை மட்டும்
திரும்பத் திரும்ப மாற்றி...
ஒவ்வொரு முறையும்
எரியும் சுடர்
ஒன்றே தானா.... ?
வேறு....வேறா.... ?