பரமபதத்தின் ஒரு நாள்
பங்குச்சந்தையின் புள்ளிகளாகப்
பச்சையும் சிவப்புமாய்
மாறி மாறி ஒளிரத்
துவங்கி விட்டது.
ஒரு பங்கை நீ வாங்கியதும்
அதன் விலை குறைவதாகச்
சன்னமாகச் சிணுங்குகிறாய்.
எதுவும் கைக்கெட்டியவுடன்
மதிப்பு குறையத் தானே செய்கிறது
என்று நான் சொல்வது
உனக்குப் புரியாமல் இல்லை.
இலக்கை நோக்கி
ஒன்றின் விலை ஏறுகையில்
வெற்றிப் பதட்டத்தில் – என்
கைகளைப் பிடித்துக் கொள்கிறாய்.
அதல பாதாளத்திற்கு
வேறொன்று உருண்டு இறங்குகையில்
ஆதரவாக உன்னை
அணைத்துக் கொள்கிறேன்.
நம் இதயத்தின் துடிப்புகள்
வெவ்வேறு காரணங்களுக்காக
அதிகமாகத் தொடங்குகிறது.
இத்தனை ஏற்ற இறக்கங்களுக்கு
மத்தியில் – என் ஒரு நாளின்
திட்டமான லாபம் என்பது
நெரிசல்மிகு சந்தையின் மத்தியில்
வேறு எவரும் அறியாதபடி
நீயே உணராதபடி
உன்னுடன் எனக்கு உண்டாகும்
இணக்கமான அணுக்கம் மட்டும் தான்.
No comments:
Post a Comment