தரை மேல் படர்ந்திருக்கும்
தன் நிழல் மீதே
அந்த இலை உதிர்கிறது
வாசலில் உயர்ந்திருக்கும்
ஓர் அந்நிய மரத்தடி அமர்ந்திருக்கிறோம்
மெல்லிய வெயில் ஒரு நடன மாதென
நெளிந்து கொண்டிருக்கிறது வெளியெங்கும்
வெயிலில் அசையும் காற்று
கிளைகளின் நிழல் இருப்பை
சதா இடமாற்றம் செய்து கொண்டிருக்கிறது
இன்னும் ஒரு வார்த்தையைக் கூட
நாம் உச்சரித்திருக்கவில்லை
பழுப்பு நிற சாறுள்ள பழங்கள் - நம்
கால்களுக்கிடை உருண்டபடி இருக்கின்றன
நம் மௌனத்தின் பரப்பெங்கும் பகற்பொழுது
பாத்திரத்தின் விளிம்பிலிருந்து வழியும்
ஒரு தேன் துளியெனப் பிசுபிசுக்கிறது
ஒளி மறைந்து இருள் பெருகும் பொழுதில்
திடீரென பொழியத் துவங்கும்
உக்கிரமான பனியில் நிலம் வெடித்து
விறைத்த மரத்தின் வேர்கள்
மேல் எழும்புமென பார்த்திருக்கிறேன்
இரகசியமான பனிக்காற்றின் சீறலென
உன் குரல் வெளியேறி தெரிவிக்கிறது
இந்த செர்ரி மரம் - இன்று
காலையில் தான் நடப்பட்டது என
அந்த குரலின் உலோகத்தின் வழி
வேறொன்றும் சொல்ல விரும்பினாய்
அது ஒரு உரையாடலின்
துவக்கமில்லை என்றும்
No comments:
Post a Comment