சொல்லப்பட வேண்டியவை எல்லாம்
சொல்லப்பட்டாகி விட்டது
உலகின் ஆதி சொல் முதல்
ஊழியின் இறுதி வார்த்தை வரை!
பார்வைகளிலும் பரிமாற்றங்களிலும்
வெளிப்படுத்தப் படாத
இரகசியங்கள் அனைத்தும் - இதோ
உயர்குன்றுகளின் பாறைகளில்
அழுந்த செதுக்கப்பட்டு விட்டன!
நுழைவாயில் அடைக்கப்பட்ட
மலைக்குகையின் சிற்பங்களெல்லாம்
தடைகளுடைத்து உலவுகின்றன
இரவு நகரத்து வீதிகளில்
நூற்றாண்டுகளின் புழுக்கம் தீர!
அணை உடைத்தோடும் அன்பை
அடைக்குந் தாழ்களையும் நீக்கியாயிற்று!
இனி ........
கூர் பார்வைகள் துளைத்தெடுக்கும்
நிறை சபைகளிலும்
நிர்வாணம் குறித்தான தயக்கங்கள்
எதுவும் மீதமில்லை எம்மிடம்!
No comments:
Post a Comment