Monday, May 4, 2026

மீள்

 எல்லைகளற்ற வானத்தை நாம் அடைய 

நீ தீட்டும் வரைபடங்கள் புதுமையானவை

உடனிருக்கையில் மிகுந்த வாஞ்சையுடன் நீ

கண்டறியும் காற்றின் சுழற்பாதைகளில் 

என் கவனம் சிறிதும் நிலைப்பதில்லை

போகும் நீல பயண வழிகளெங்கும்

திசைகள் தொலையும் ஆகாயத்தின் முடிவில் 

இளைப்பாறுவதைப் பற்றியே பேசுகிறாய்

இருப்பினும் என்னை

பூமியின் ரேகைகள் தெரியாத உயரங்களுக்கு

நம்பிக்கைகளூட்டி அழைத்துச் செல்லாதே

சிறகுகளின் வலி உடலில் ஏறினாலும்

தரையிறங்கும் யுக்திகளறியா பறவை நான்

ஏனெனில் ஒவ்வொரு நாளின் முடிவிலும் 

என்னைத் தனித்து விட்டு நீங்கிச் செல்ல

உன்னைக் காத்திரமாக அழைத்தபடி இருக்கிறது

நீ திரும்பியே ஆக வேண்டிய நிர்பந்தங்களுடன்

சூளைகளில் சுட்ட கற்களினாலான ஒரு வீடு

நீ அழைப்பு மணியை அழுத்தும் முன்

நம் அன்பின் இறகுகளை உதிர்த்து செல்ல

காய்ந்த பூக்கள் சிதறியிருக்கும் ஒரு வாசலும்


No comments:

Post a Comment