Monday, May 4, 2026

இரசவாதம்

வேதனையின் இரகசியம்

நிரம்பிய கனவுகளை

கோவைப் பழங்களென மாற்றி

உணவென இடுகிறேன்

சிறகுகள் உடைந்த

அலகு வெளுத்த

மரப்பொந்து பறவைக்கு

மண்ணில் வீழும் எச்சவிதைகள்

வெடித்து முளைக்கும்

வலியின் ஒலியோடு

காற்றில் நீண்டலையும்

பயத்தின் கொடிகள் இறுக

சுற்றிப் படர்கின்றன விருட்சத்தை

இடைவெளியின்றி

பொந்துக்குள் சிக்கித் திணறும்

பறவையின் இறுதி மூச்சு

பேரிரைச்சலுடன் அறுத்தெறிகிறது

என் நீள்துயிலின் மெல்லிய இழையை

உயிர் நீங்கிய உடலை

கைகளில் ஏந்துகையில் 

சிவக்கத் துவங்குகிறது

பறவையின் அலகு

வெளுத்துக் கனிகின்றன

கோவைக் காய்கள்


No comments:

Post a Comment