நீ வசிக்கும் பனி உறைந்த மலை சரிவுகளில்
மோன அலைகளாய் இறங்கி வரும் மேகங்களென
விரைந்து ஆக்ரமிக்கின்றன உன் நினைவுகள்
இப்பின்னிரவில் உன் குரல் எங்கிருந்தோ
சொல்ல முடியாதொரு இரகசியமென கசிகின்றது
வெளியே அமைதியாய் கண்சிமிட்டும் நட்சத்திரங்களையும்
நீர்துளிகள் உறையும் டியோடார் மரத்தின் மௌனத்தையும்
பகிர்ந்து கொள்வதற்கு அப்பால் வேறெதையும்
அனுமதிக்க முடிவதில்லை உன்னால்
இந்த அறைக்குள் உஷ்ணம் கூட்டும்
ஆரஞ்சு வெளிச்சத்தை நோக்கி ஈர்க்கப்படும்
விட்டில்களின் இறகுகள் நாளைக் காலை உதிர்ந்திருக்கும்
பேரொளி பற்றிய ஏக்கங்களின் மிச்சமாய்
என்னுடன் குளிர் படுத்துறங்கும் கம்பளிக்குள்
ஒரு நீர்த்திவலையென உருள்கிறது
உன் பழுப்பு நிறக் கண்களின் பிம்பம்
அடர்ந்து சுருளும் உன் முடிக்கற்றைகள்
நினைவுபடுத்தும் செம்மறியாட்டுக் கூட்டங்களை
எண்ணிக் கொண்டு இமைகள் மூடுகிறேன்
மெல்ல துயில முயலும் விழித்திரைகள் கிழித்து
ஆரவாரமாய் உள் நுழைகிறது
மதநீர் ஒழுகும் யானைகளின் பிளிறல்களால்
அதிர்ந்திடும் ஓர் இருள் கானகம்
(டல்ஹௌஸி - ஹிமாசல்பிரதேசத்தின் ஒரு குளிர் நகரம்)
No comments:
Post a Comment