உன் நினைவுகளைத் திரட்டி
ஒரு மண்புழுவெனக் குறுக்கிப்
புழுதி தோண்டி ஆழப் புதைக்கிறேன்.
அப்படியும் என் பதற்றம் தணியவில்லை.
நானே ஒரு வெண்புரவியின் உருவெடுத்துக்
குளம்புகள் குழிகள் பறிக்கும் வேகத்தில்
எதிர்திசையில் பாய்ந்து செல்கிறேன்.
காற்றைக் கிழிக்கும் சரீரம்
காகிதமெனப் பறக்கிறது
மலைகள் பள்ளத்தாக்குகள்
வனங்கள் பாலைகள் கடந்து
உண்டாகும் தூர இடைவெளிக்காக.
தாகமும் தேகமும் ஒன்றென ஆகுமிடத்தில்
திசைக்காட்டிகள் உலகின் மறுமுனையை
அடைந்து விட்டதாய்க் காட்டுகின்றன.
மிகுந்த விடுதலையோடு – முன்னங்கால்களை
மேலுயர்த்திக் கனைக்கையில்
பூமி நடுங்குகிறது.
தன் நீண்ட உடல் நெளித்து ஆடியபடி
நிலம் பிளந்து மேலே எழுகிறது
பேரரவமாக மாறிவிட்ட சிறுபுழு.
என் பிடரி மயிர் வழி வழியும்
வியர்வைத் துளியொன்றை
அது தரையடையும் முன் – பிளவுண்ட
தன் நீண்ட நாவால் சுவைத்தபடி.
No comments:
Post a Comment