அதிருப்தியுற்ற பழைய காதலன் போல்
பழிவாங்குதல்கள் நிறைந்திருக்கிறது இவ்விரவு
பேரீச்சை மரங்களின் பிளந்த கீற்றுகள் வழி
வெளிப்படும் மஞ்சள் நிலவில் தேடி
வந்திருக்கிறேன் மீண்டும் உன்னை
ஒட்டகங்களின் குளம்புகள் பதித்த சுவடுகள்
நிறைந்த பொன்னிற மணல் வெளியில்
மெஹ்ருன்னிசா . . .
தீர்க்கதரிசனத்தின் வரமும் அதை சொல்லக்
கூடாத சாபத்தையும் அடைந்தவளே !
முதல் தரிசனத்தில் உரைக்காதவற்றை
மறு சந்திப்பில் வெளிப்படுத்துவாயெனும்
நம்பிக்கையில் அடைந்திருக்கிறேன்
கூர்வாள் கொடிகள் உயரப் பறக்கும் உன் கூடாரத்தை
அன்று உடைய விரும்பும் நீர்க்குமிழ்
போன்ற உன் குவிந்த இதழ்கள்
எதை சொல்லத் துடித்தன மெஹ்ருன்னிசா
எந்த சத்தியத்தின் இரகசியப் பிரமாணம்
உன்னைத் தடுத்து நிறுத்தியது
என் புறங்கையில் எதிர்பாராமல் சிந்திய
உன் ஒற்றைக் கண்ணீர் துளி
எதற்காக அப்படி நடுங்கியது - இதோ
இப்போதும் எனக்கான உன் பார்வையில்
ஒரு தீயில் கருகிய பறவைக் குஞ்சிற்கான
பெரும் பரிவு ஏன்
தயக்கமின்றி சொல்
எத்தனை முறைகள் எரிந்தாலும்
சாம்பலிலிருந்து அத்தனை முறைகளும்
உயிர்த்தெழும் சூட்சுமம் கற்ற பின்னே
வந்திருக்கிறேன் இம்முறை
No comments:
Post a Comment