I)
அறிந்திடப்படாத ஓர் ஆதி நதியில்
என்றோ உதிர்ந்து விட்ட இலை நான்
கரை சேராமலும் ஆழம் மூழ்காமலும்
முடிவற்று மிதக்கிறது எனது பயணம்
நீ அன்று நீரில் கரைந்து போன இலையின் நிறம்
இன்று இலையை ஏந்திச் செல்லும் நிறமற்ற நீரலை
நிசப்தம் பிரவாகமென பொங்கி பெருகினும்
சதா நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது நமக்கிடையில்
வாத்தியத்திலிருந்து விடுபடாத இசையை ஒத்த
ஓர் இனிய உரையாடல்
II)
பெயரிடப்படாத ஒரு பருவத்து வானில்
சிறகின்றிப் பறக்கும் காய்ந்த இலை நான்
எழுந்தும் வீழ்ந்தும் நின்றபடி சுழன்றும்
காலவெளியில் அரங்கேறும் எனது நடனம்
நீ அன்று கிளையிலிருந்தபடி இலை
உண்டாக்கிய மெல்லிய அதிர்வு
இன்று உயர தூக்கி இலையைக்
களிப்பேற்றும் வலிய காற்று
ஒலி ஓசை ஓலம் வழி உரக்கப் பேசிடினும்
பரஸ்பரம் நாம் கேட்டுக் கொண்டேயிருப்பது
பேரண்டம் எங்கும் நிறைந்து வழியும்
நம் பெரும் மௌனத்தை மட்டுமே
No comments:
Post a Comment