அதிகாலைப் பறவைகளின் ஒலி
என் தூக்கம் கலைக்காத கனவுகளில்
உன் முத்த சப்தத்தை ஒத்திருக்கிறது
ஒன்று - பின்னர் மேலும் ஒன்றென
முன்னேறும் உன் தொலைதூர முத்தங்கள்
அமர்ந்து செல்கின்றன இதழ்கள் மீது
ஒரு பட்டாம்பூச்சியின் இலாகவத்தோடும்
மென்மையோடும்!
உதிர்ந்த முத்தங்களின் சிறகுகள்
பத்திரமாக பாடமாகி மின்னுகின்றன
என் நாட்குறிப்பின் பக்கங்களினூடே
என்றேனுமொரு மஞ்சள் மாலையில் - எனை
தளிர்கள் ஒளிரும் வனத்திற்குள்
திசைகள்தோறும் நெளிந்தோடும்
பாதைகளிலொன்று இட்டுச் செல்கையில்
கிளைகள்தோறும் - உன்
முத்த சப்தங்களைக் கேட்டவாறிருப்பேன்.
No comments:
Post a Comment