Monday, May 4, 2026

சொல் அதிகாரம்

எந்தப் பொருளைக் குறிக்கவும்

எந்த சொல்லும் தேவைப்படுவதில்லை உனக்கு

பசியாறிய சிங்கம் மான் கூட்டத்தை

புறக்கணித்து நடப்பது போல்

அலட்சியமாய் கடந்து செல்கிறாய் சொற்களை

உன் உதடுகள் லேசாக விரிகையில்

வந்து உட்கார்வதற்கென உனை சுற்றித்

தவமிருக்கின்றன முட்டாள் அட்சரங்கள்

முகம் தெரியாத இருளின்

கனத்த மௌனத்திலும் - நீ

சொல்ல விரும்பும் வாக்கியங்கள்

ஒரு காட்டுப் பூனையின் கண்களென

பிரகாசமாக ஒளிர்கின்றன

எப்போதேனும் அபூர்வமாய்

நீ பேசுவதென முடிவு செய்கையில்

செங்கடலைப் பிளக்கும் அதிகாரத்தை

மோசேயின் கோலுக்கு வைத்த தேவன்

உன் ஒற்றை வார்த்தைக்கும் வைக்கின்றான் போல..! 

                                                                                                  (- ஆனந்திற்கு )


No comments:

Post a Comment