Monday, May 4, 2026

சீறல்

 

​வெளியே பெருமழை பெய்து கொண்டிருந்த

இரவில் தான்

என்னைப் பிரிய வேண்டிய காரணங்களை

அடுக்கிக் கொண்டிருக்கிறாய்.

முதுமரம் முறியும் பெருஞ்சப்தத்தில்

மென்மனம் உடையும் சிறு ஓசையை

நீ அறியவேயில்லை.

நீயற்ற நாட்களைக் கடப்பது

வெள்ளத்தில் பாலம் மூழ்கிய

ஆற்றைக் கடப்பது போல்

அவ்வளவு திணறலாக இருக்கிறது.

இன்னும் எவ்வளவு தொலைவு தான் செல்ல இயலும்?

கையோடு எடுத்துச் சென்று விட்ட

நம் சதுரங்கக் கட்டங்களில்

என் காய்களின் நகர்த்தல்களையும்

நீயே தான் செய்து கொள்கிறாய்.

தொடர்ந்து மழை பெருகும் பின்னரவுகளில்

என் நீண்ட பெருமூச்சின் ஒலி

விழுந்த மரக்கிளையிலிருந்து

சீற்றத்துடன் இறங்கிச் செல்லும்

ஒரு நாகத்தின் சீறலை ஒத்திருக்கிறது.

No comments:

Post a Comment