நாலுக்கட்டு வீட்டின் செவ்வோடுகளில்
இறங்கி வரும் இரக்கமற்ற மழை
நடுமுற்றத்தில் – வெள்ளமெனப் பெருகும்
சந்தியாக் காலத்தில்
எதிர்நோக்கியிருந்த ஒரு வருகை
உறுதியாக இரத்தானதை
ஏற்க முயல்கிறேன்
எந்த வருத்தமுமின்றி.
பலாமரக் காட்டுக்குள்
ஈரம் கனத்த தோகையின்
பாரம் தாளாமல்
நிராதரவாக குரலெழுப்பும்
மயில்களின் அகவல்கள்
எதிரொலிக்கின்றன இவ்வீட்டின்
யாருமற்ற எண்ணற்ற அறைகளில்.
நான் இந்தத் தரவாட்டின் வாசலில்
வெளியே செல்லும் முன் தீற்றிக் கொள்ள
கூரையின் சரிவில் மாட்டப்பட்டிருக்கும்
பஸ்மம் ஏந்திய எஃகுக் கலயத்தின்
நூறாண்டுகள் கடந்த உறுதியை மட்டும்
பற்றிக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment