திருப்பாமல் எப்படி நிறுத்துவதென தெரியவில்லை
வார்த்தைகள் வனாந்தரத்தில் அலையும் பக்கங்களை
உன் அகத்தின் காயங்களை
பெருமூச்சுகளின் தகிப்புகளை
இரகசியமான விம்மல்களை
சுயஇன்பம் முடிவுறும் காழ்ப்புணர்ச்சிகளை
உன் நாட்குறிப்புக்கு மறுக்கப்பட்ட திறப்புகளைக்
கண்டு கொள்ளாதது போல் கடந்து
செல்வது எவ்வாறென விளங்கவில்லை
இவ்வளவு இலகுவானதா உன் இதயம்
ஒரு சின்னஞ்சிறு சொல் உன்னை
இறுதி வரை அழுத்தியிருந்ததா
ஏதொவொரு காலையில் எழுப்பிய குறுஞ்செய்தி
ஒவ்வொரு விடியலிலும் படிக்கப்பட்டதா
இலக்குகள் தொலைத்த உன் பார்வைகள்
எந்தன் திசைகளைத் தேடியா இருந்தன
காகிதங்களின் நிலத்திலிருந்து எழுந்து வரும்
முற்றிலும் இப்புதிய மனிதனை சந்திக்காமல்
புறக்கணிப்பது இன்னும் கைகூடவில்லை
உன் சவப்பெட்டியை இறக்கிய குழிக்குள்
என் குற்றவுணர்ச்சிகளையும் புதைத்து விட்டு
படிக்கத் தொடங்கியிருக்க வேண்டும்
உன்னைப் பற்றிய உன் கவிதைகளை
No comments:
Post a Comment