• கண்மண் தெரியாமல்
இப்பாலை நிலத்தில்
வெகு தூரம்
ஓடி வந்து விட்டேன் நண்பா!
ஈர வாசம் பிடித்துக் கொண்டு
இந்தக் கிணற்றடிக்கு வந்தால்
என்னிரு விழிகளும்
நீர்ப்பரப்பில் மிதந்தபடி
வெறித்துப் பார்க்கின்றன என்னை.
• உயிரெல்லாம் வேண்டாம்
களைத்துறங்கும் – என்
உள்ளங்கால்களை
இரவு முழுதும் அழுத்தி விட
உன் பத்து விரல்களை மட்டும்
படுக்கையினோரம்
வைத்து விட்டுப் போ.
• அக்குள் பிளந்து
வியர்வை வாசக் காற்றில்
தலைவிரித்தாடும் காடொன்று
என்னை உள்ளிழுத்துக் கொள்கிறது.
எவர் தோளில்
தலை வைத்துப் படுத்தேன்
என்று தான் நினைவில்லை.
• இந்தச் சுருட்டு பிடிக்கும் கலையை
நீ – இன்னும் கொஞ்சம்
முறையாகக் கற்றுத் தேற வேண்டும் தோழீ.
மூச்சை இழுத்து வெளிவிடுகையில்
உன் முலைக்காம்புகள் வழியே
புகை வளையம் வளையமாய்
வெளியே கசிகிறது பார்..!
No comments:
Post a Comment