Monday, May 4, 2026

வாதை

 அங்கீகாரமில்லாப் பிரிவின்

தொலைதூரப் பயணத்தினூடே

திரும்ப அழைக்கிறாய் என்னை

பாலையின் சுடு மணல் வெளியின்

உதடு வெடித்த யாத்ரீகனாய்

நிற்கிறேன்

கற்றாழை முட்கள் கனத்திருக்கும்

உன் கூடாரத்தின் முன்னே

பிரிவின் வாதைகளையும்

பிரிவின் காரணங்களையும்

வரிசைப் படுத்தி அடுக்காதே

தயவு செய்து

நீ உணவு பரிமாறியிருக்கும்

மேஜையின் நடுவே சப்பணமிட்டிருக்கும்

கிளைகள் பரப்பிய மௌனம்

அவற்றைத் தின்று தீர்க்கட்டும்

பனி உறைந்திருக்கும் 

உன் இதழ்களால்

காய்ந்த என் நிலங்களை

ஈரமாக்கு

களைப்புற்றிருக்கிறேன் நான்


No comments:

Post a Comment