இன்று முழுதும் உனக்கான காத்திருப்பில்
மௌனித்திருந்தது வாசலும் கூரையுமற்ற என் வீடு
அண்டைக் காட்டினின்று வீசும் தொடர் காற்று
என் வீட்டினுள் இடைவிடாது பெய்கிறது
பழுத்த இலைகளிலான மஞ்சள் மழையை
ஒரு நாளுக்குள் சருகாகி வெட்கமின்றி
நறநறக்கும் என் பாதங்களுக்கடியில் அவை
இன்றும் உன் வருகைக்கான உறுதியளிப்பை
நாளைக்குரியதென ஆறுதல் கொள்ள எத்தனிக்கிறது
வலிமையான சுவர்கள் கொண்ட வீடு
எந்த சம்பவங்களுமற்று கடந்து போகும்
நாள் கொண்ட வீட்டின் அந்தியிலும்
ஏற்றவே வேண்டியிருக்கிறது வெளிச்சம்
தர வேண்டி ஒரு சிறிய விளக்கை
நள்ளிரவில் திரி தூண்ட முயல்கையில்
தீர்ந்து போயிருக்கிறது வீட்டினுள்
நம்பிக்கைகளும் எண்ணெயும்
எரியவும் திராணியற்று
அணையவும் மனமுமற்று
தேம்பித் ததும்புகிறது மெல்லிய சுடர்
சுடரின் ஓர் இழை பிரிந்து
தரையில் விழுந்திடுமோ என
பதறித் திரும்புகிறேன் நான்
No comments:
Post a Comment