Monday, May 4, 2026

நமனை அஞ்சோம்


​உன் கூரைக்கு மேல் விரிந்திருக்கும்

கிளைகளினூடே சொட்டிக் கொண்டேயிருக்கும்

மழையின் ஈரம் சுவர்களில் கசிகிறது.

நீ மது அருந்துவதில்லையா எனக் கேட்கிறாய்

இவ்வளவு மழைக்கப்புறம்

இந்தத் தேநீரே அதிகம்.

ஆவி பறக்க நம் கைகளில் வைத்திருக்கிறோம்

சுட்ட களிமண் குவளைகளை.

நிதானமாக ஒவ்வொரு மிடறாகச்

சுவைத்துப் பருகு...

இதுவே உன் கடைசி பானம் போல்

தோற்றம் அளிக்கிறது என்கிறேன்

நீலம் பாரிக்கத் துவங்கும் - உன்

வெண்ணிறக் கோப்பையைப் பார்த்து.

உன் கண்கள் பிரகாசமடைகின்றன.

அப்படியெனில் – சர்க்கரை

இன்னும் கொஞ்சம் தூக்கலாக வேண்டும் எனக்

கோப்பையை நீட்டுகிறாய்.

அஞ்சி ஓடுபவர்களைத் தானே

துரத்த இயலும்... !?

கட்டியணைப்பவர்களின் பிடியிலிருந்து

தப்பிக்கப் போராடுகிறது மரணம்.

​              (ஹமீதிற்கு)

No comments:

Post a Comment