அந்த ஆக்ரோஷ நீண்ட அருவி
வழிந்து கொண்டிருக்கிறது
வந்தடையும் பூமியின் எல்லா
துவாரங்களிலும் நிறைந்தும் வழிந்தும்
கரையில் நடுங்கும் - ஓர் இலை
மேல் எறும்பொன்று ஊர்கிறது
தரை நோக்கி
உடையும் நீர்க்குமிழ்களை
மேலிருந்து காண்கிறது எறும்பு
அருவியைக் குடித்து விடும்
வேட்கை கொண்ட எறும்பு
மேலும் ஊர்கிறது வேகமாக
முடிவிலா பச்சை இலை மேல்
நுண் நீர்த்துளிகள் விசிறும்
நிலமெங்கும் எறும்பின் பார்வையில்
வெடிக்கின்றன சாம்பல் நிற மொட்டுகள்
No comments:
Post a Comment