Monday, May 4, 2026

கனலும் இரவு

சில்வண்டுகளின் அழைப்புகளை மொழிபெயர்ப்பதாய் 

துவங்குவாய் ஒரு கள்ளமில்லா பேச்சை

வெயிலின் வாசம் இன்னும் மீதமிருக்கிற

இளவேனில் கால இரவுகள் அவ்வளவு

எளிதில் நம்மைக் கைவிட்டு விடுவதில்லை

மெதுவாய் மல்லிகை மொக்குகள் விரியும் நுட்பத்தை

ஆராயத் தொடங்குவோம் வெகு இயல்பாக

தேய்ந்து மெலிந்த திரியும் பிறையை வளர்த்தெடுப்போம்

தொடரும் இரவுகளில் நம் உரையாடல்களினூடே 

பாலில் ஊறிய பருத்த முழு நிலவென               

விரிந்த வானிற்காக ஏங்கும் பறவைக்குஞ்சு

குருதி பாய்ந்து உப்பிய சிறகுகளோடு முயற்சிக்கும்

முதல் பறத்தலுக்கு முந்தைய நொடிபோல்

பின்தொடர்ந்து ஒரு மௌனம் நீள்கையில்

நம்மோடு ஒரு கங்கென கனலத் துவங்கும்

மென்காற்றென காமம் விசிறப்படும் இவ்விரவு

பொறுத்திருக்கலாம்

கனன்று கொண்டிருக்கையில் சாம்பல் இல்லை


No comments:

Post a Comment