தட்டான்கள் தாழப் பறந்தறியா நகரத்தின்
ஆரஞ்சு விளக்குகள் எரியும்
நடுசாமக் கனவுகளின் நாற்சந்தியில்
இறங்குகிறேன் எந்த முன்னறிவிப்புமின்றி
புறக்கணிக்கப்பட்ட வரலாற்றின் நினைவுகள்
பீளை வடியும் கண்களுடன்
தெருக்களெங்கும் நடமாடுவதை
இமை கொட்டாது வெறிக்கிறது
கால் மாற்றி நிற்கும்
சிலை வீரனின் போர்க் குதிரை
வௌவால்கள் நெருங்கும் ஆகாயம்
தீர்க்கமாக கைவிடும் நட்சத்திரங்களை
வாதாம் மர இலைகள் - சிவக்கும்
நிலத்தின் ஆழத்தில் பத்திரமாய்
புதைத்து விட்டு வெளியேறுகிறேன்
எந்த சுவடுகளுமின்றி
No comments:
Post a Comment