Monday, May 4, 2026

அணையா விளக்கு


​இருளில் மூழ்கியிருப்பதைத் தவிர

நேற்று – பெரும்புயல்

கடந்து சென்றதற்கான

எந்த சுவடுகளுமற்று இருக்கிறது

இப்பெருநகரத்து மாலை.

பண்டிகை நாளின் தீபங்கள்

பழுத்த மஞ்சள் சுடர்களுடன்

பால்கனி தோறும் மிளிர்கின்றன.

ஒரு அகல் கூட – நான்

ஏற்றாதது குறித்து வியக்கிறாள்

எதிர் குடியிருப்பின் பெண்.

அவசியம் ஏதுமில்லை என்று

தாழிட்டுக் கொள்கிறேன்

ஏனெனில்

சாத்தியக் கதவுகளுக்குப் பின்

நான் வசிப்பது

பொன்னிற நிலவு

அசையும் பெருவிளக்கென

அலையும் ஒரு வனாந்திரத்தில்...

பொன்னிற வெளிச்சம்

நனைந்து ததும்பும்

ஒரு தடாகக் கரையில்.

No comments:

Post a Comment