Monday, May 4, 2026

மாற்றம்


அவள் திக்குத் தெரியாத காட்டில்

இப்போதெல்லாம் திகைத்து நிற்பதில்லை..

​தன் கைப்பையில் ஒளித்திருக்கும்

பாதைகளில் ஒன்றை எடுத்து

வெளியே நழுவ விடுகிறாள்

அது ஒரு மாயக் கம்பளமென

மிதந்து சென்று – அவள்

காலடியில் படுத்துக் கொள்கிறது.


​துர்சொப்பனங்களில் துரத்தும்

கொடும் விலங்குகளை விரட்ட

உள்ளங்கைகளை உரசுகையில் தெறிக்கும்

நெருப்புப் பொறிகள் கொண்டு

ஒரு சுளுந்தீயைக் கொளுத்தி ஏந்துகிறாள்.


​இச்சைகளின் பொன்வண்டுகள்

மினுமினுப்பான அழைப்போடு

அவளைச் சுற்றி வருகையில்

தன் கூந்தலில் ஆபரணங்களாக்கி

பின் வசதியாக மறந்து போகிறாள்.


​சிறு குளத்தில் எளிதாய் அகப்படும்

அயிரை மீனாய் ஜீவித்ததிலிருந்து

ஆழ்கடலின் இருளிலும் ஒளிரும்

ஒரு விஷம் கக்கும் ஜெல்லிமீனாய்

அவள் தன்னை மாற்றிக் கொண்டது

இதற்குச் சற்று முன்பு தான்.

No comments:

Post a Comment