Monday, May 4, 2026

அந்த கணத்தில்

 கொல்லைப் புறத்து பாழ்கிணற்றில்

உவர்த்த நீர் பெருகும் நாளில்

காலியாகி விட்டிருக்கிறது

சொற்கள் நிரப்பப்படும் - உன்

பழைய மண் குதிர்

கருமையாய் அடர்ந்து நுரைக்கிறது

உன் குற்றங்களின் நிசப்தத்தில்

நீயே வசித்தறியா உன் வீடு

குதிரின் தூரில் படர்ந்திருக்கும்

மன்னிப்பிற்கான சொற்களின்

படிமங்களை - நீ

தேய்த்து எடுக்க எடுக்க

அவை அங்கேயே தங்கி விடுகின்றன

உன் நகக்கண்களின் அழுக்கென

அங்கொன்றும் இங்கொன்றுமாய்

பொறுக்கி மாலையெனக் கோர்க்கிறாய்

சாலையில் கண்மூடிக் கடக்கும்

சவ ஊர்வலத்தின் வார்த்தைகளை

பிணக் கழுத்துகளுக்கே அது

உரியதென - நீ

உணர்ந்திடும் வேளையில் - அது

உயிர்ப்பின் வாசமில்லா பெருவெளியில் 

இருப்பின் உணர்வின்றி கரைகிறது

இன்று எல்லா நகரத்திலும்

சொற்கள் தேடுவோர் பட்டியலில்

உன் பெயரே முதன்மையாய் இருக்கிறது

அறிந்து கொள்ள வாய்க்கலாம் உனக்கு

உலகின் எந்த மொழியின் சொற்களும்

உன் குற்றங்களின் கறைகளைக்

கழுவ வல்லவை அல்ல என

நீ தேடும் சொற்கள்

உன்னைக் கடந்து போகும் கணத்தில்


No comments:

Post a Comment