நாம் தான் அதை அழைத்து வந்தோம்
இருப்பினும் அதன் வருகையும் இருப்பும்
நம்மைத் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது
என் உயிர் கசியும்படி இரகசியமாகவும்
உன் உடல் பதறும்படி பகிரங்கமாகவும்
அதன் சின்ன கண்களில் வழியும் குழந்தைமை
நம்மை செயலற்றுப் போகச் செய்து கொண்டிருந்தது
கவலைகளற்றுக் கண்கள் மூடி உறங்குகையில்
அது இல்லாதது போலவே இருந்ததால்
நாம் சற்று ஆசுவாசப்பட்டுக் கொண்டோம்
எனினும் அதற்கு நாம் அனுமதித்திருந்த
இடத்தை தாண்டி அபகரிப்பது போலிருந்ததால்
அதை அப்புறப்படுத்துவதென முடிவு செய்தோம்
நிராயுதபாணியாக நிற்கும் அதற்கு முன்
அத்தனை கொலை ஆயுதங்களும்
மிகுந்த பலமற்றதாகவும்
மிகுந்த பலமுள்ளதாகவும்
ஒரே சமயத்தில் தோன்ற ஆரம்பிக்கின்றன
வேதனையும் கடுமையும் நிறைந்த
ஒரு வழியனுப்பும் வேண்டுகோளில்
அது உயிரிழந்து விடுமென
ஒருவேளை நமக்குத் தெரிந்து தானிருந்தது
எல்லா காலங்களுக்கும் உணவு சேகரிக்கும்
நம் வீட்டின் வேனிற்கால எறும்புகள்
மெதுவாக அதைத் தம் பொந்துக்கு
இழுத்துச் செல்கையில்
அதன் முகத்தில் நிம்மதியான புன்னகை
இருந்ததாக நீ சொன்னாய்
நான் அதை மிகவும் நம்ப விரும்பினேன்
No comments:
Post a Comment