Monday, May 4, 2026

அம்பா எனும் சிகண்டி

 

​✤ புதிதென முகிழ்க்கும் காதலின்

சுவையென்ன அம்பா.. ?

​➢ வெற்றிலைச் சாற்றில்

பனங்கள் தோய்த்து

அதிமதுரம் தடவிய நாவில்

ஒரு மிடறு கொள்ள

மெல்லென ஊறும் இரசமது.

✤ தீராப் பெருங்காமத்தின்

வாசமென்ன அம்பா.. ?

​➢ கொப்பணிந்த காதுமடலின் பின்புறம்

நேற்றிரவு அவள் சூடியிராத

செங்கமல வாசம்

(அ)

➢ கட்டுக்கடங்காமல் பாய்ச்சலிடும்

குதிரையின் உடல் மணமும்

உயர் புல்வெளி சிதையும்

பச்சை வாசமும்

கலந்த ஓர் அடர் நெடி.

✤ மறுதலிக்கப்பட்ட அன்பின்

ஒலியென்ன அம்பா.. ?

​➢ தேன் நிறை கூட்டின்

வழி மறந்த

மனம்பிறழ் வண்டின்

வலிமிகு ரீங்காரம்.


​✤ புறக்கணிக்கப்பட்ட நேசத்தின்

வடிவமென்ன அம்பா.. ?

​➢ திருகி எறிந்த

மூன்றாம் முலை

பாதி தேய்ந்த கோளென - வானில்

வலம் வரும் கோலம்.


​✤ மனமுடைந்து இறந்த உயிரை

உணர்வதெப்படி அம்பா.. ?

​➢ வெஞ்சினம் தீர்க்கும் நாளெண்ணி

கருவுக்குள் சுழலும் சிசுவின் அசைவை

நிறைசூல் வயிற்றில் தொட்டுப் பார்.

No comments:

Post a Comment