Monday, May 4, 2026

யாதும்...யாவரும்..


​உனது ஊர் எதுவெனக்

கேட்பவரிடம் சொல்வதற்கு

ஆயத்தமாய் பதிலொன்று

என்னிடம் உள்ளது.

ஆயினும்

கடல் மேல் வீசும் காற்றுக்குச்

சொந்த ஊர் என எதைச் சொல்வது?

முட்செடிகளை அசை போடும்

ஒட்டகங்கள் நடக்கும் மணற்பாதைகளிலும்

வெடிக்கும் வெண்பஞ்சின் இழைகளெனப்

பனி உதிரும் கற்சாலைகளிலும்

என் ஆன்மாவை மீட்டெடுக்கிறேனில்

அவை எனக்கான ஊர்கள் இல்லையா..!?

நான் ஒவ்வொரு பருவத்திலும்

வெவ்வேறு திசைகளில்

வலசை செல்லும் பறவை.

என் கால்களில் மாயச்சங்கிலிகளைப்

பிணைத்துக் கொள்ளும்

தந்திரக் கூடுகளை

நான் கட்டிக் கொள்வதில்லை.

சிறகசைக்காமல் உயரே

வானில் வட்டமிடுகையில்

நீல ஆகாயமே என் கூடு.

No comments:

Post a Comment