Monday, May 4, 2026

​நில நிலவு


​இளமஞ்சள் பலூன் என

வானில் இங்குமங்கும்

அலைந்து கொண்டிருக்கிறது நிலவு.

அதன் நுனியில் முடிச்சிட்ட நூலை

உன் கையில் – தறியில்

நெசவாடும் பெண்ணைப் போல்

இடைவிடாது ஆட்டியபடி இருக்கிறாய்.

நாம் இந்தக் காலி மைதானத்தின் ஓரத்தில்

கிளைகள் தோறும் வெண்ணிற குருகுகள்

அமர்ந்திருப்பது போல்

வெண்பூக்கள் இருளில் மலர்ந்திருக்கும்

மரத்தினடியில் அமர்ந்திருக்கிறோம்.

அன்பைச் சொல்லும் எதையும் சொல்லாமல்

அதை இலகுவாகக் கடத்தி விடுவது

உனக்கு இயல்பாக வருகிறது.

பேச்சின் சுவாரசியத்தில்

அவ்வளவு நீளமான நூலை

விரல்களில் சுற்றியபடி இருக்கிறாய்.

இழுபட்டு கீழிறங்கும் நிலா

தரையில் ஒரு ரப்பர் பந்தென

எம்பி எம்பி குதித்தபடி செல்கிறது.

சின்னஞ்சிறு சிறுமியைப் போல்

நிலமொளிர ஆடித்திரியும் இது

எவ்வளவு நெருக்கம்

சந்திரா...!

         ​(சந்திரா தங்கராஜுக்கு)

No comments:

Post a Comment