ஏதோவொரு நீர்நிலையின் தீரத்திலேயே
நிகழ்கின்றது ஒவ்வொரு முறையும்
நிச்சயிக்கப்படாத நம் சந்திப்புகள்
ஐந்திணை நெறிகளையும் புறக்கணித்து
உருவாகி உருளத் தொடங்குகிறது
நம் கால்களின் கீழே
உனக்கும் எனக்குமான ஒரு புது நிலம்
கூழாங்கற்களும் அது சார்ந்த இடங்களுமெனெ
ஆற்றின் மேற்பரப்பைக் கிழித்தபடி
பறந்து செல்லும் மீன்கொத்தியின் அலகென
என் மீது ஆழம் பதிந்து உழுகின்றன
கட்டவிழ்த்து விடப்பட்ட உன் பார்வைகள்
பகலெங்கும் வெயிலை விழுங்கிய
நம் நிலத்தின் கற்கள்
ஒளியை உமிழத் துவங்குகின்றன
நிலவெழும் இந்த முன் நிசியில்
குறுகி மேலும் குறுகி
இடைவெளி இல்லாமல் போகும்
நம் நிழல்கள் நடுங்கத் துவங்குகின்றன
நீர்வெளியில் காற்று சுழித்திடும் அலைகள் மீது
இரகசிய ஆலிங்கனங்களின் வெம்மை
கிளர்ச்சியூட்டும் நதியெனப் பெருகும்
இரவின் கரையோரம்
முத்தங்களும் மூங்கில்களும்
அடர்ந்து கிளைக்கும்
No comments:
Post a Comment