Monday, May 4, 2026

சீசா பூதங்கள்


​மின்சாரம் இல்லாத

மழை இரவின் வீட்டில்

மெல்லிய திரியின் ஒளியில்

என் நிகழ்காலம் - எனைச் சுற்றி

நிழலுருவங்களாய் நடந்தேறுகிறது.

இங்கு குடி வந்த புதிதில் வாங்கப்பட்டுத்

தற்போது நெகிழி டப்பாக்களில் கெட்டிப்பட்டிருக்கும்

பெயிண்ட் வர்ணங்களைப் போல்

நினைவில் இறுகியிருக்கும் கனவுகளைத்

தேடிப் பார்க்கிறேன்.

அவையோ

சீசாக்களில் சிறைப்பட்ட பூதங்களென

வெளியேறும் வழிகளற்றுத்

திணறிக் கொண்டிருக்கின்றன.

மிகுந்த அயற்சியுடன் குளிர்ந்திருக்கும்

இரும்பு நாற்காலியில் அமர்ந்து கொள்கிறேன்.

நேற்றைய புயலுக்குத் தாழ்வாரத்தில்

ஒதுங்கியிருந்த பறவை ஒன்றின்

கூரிய நகங்கள் கொண்டு

பிய்க்கப்பட்ட இறக்கைகள்

காய்ந்த இரத்தக்கறையுடன்

சன்னல் விளிம்பில் அசைகின்றன.

No comments:

Post a Comment