Monday, May 4, 2026

எவரும் நீந்தியிராத ஆறு

தவறவிடும் பாதைகளின் வழி மட்டுமே

பயணம் செய்பவள் - எதையும் எதிர்பாராத

நாளொன்றில் கொண்டு சேர்க்கப்படுகிறாள்

அந்தியின் செவ்வொளி நிரம்பிய ஆற்றுக்கு

எந்த கருவறையையும் சூல் கொள்ள செய்யும்

மகரந்தம் படர்ந்த விரல் நுனிகளால்

பெருகிச் செல்லும் நீர்பரப்பை அளைகிறாள்

நீரடியில் கற்பாறைகள் இடம் மாற

புரண்டு சிலிர்க்கிறது - அதுவரை

எவரும் நீந்தியிராத ஆறு

ஒவ்வொன்றாய் அவள் ஆடைகள் நழுவுகின்றன

பெரிய மலரிலிருந்து உதிரும் சிற்றிதழ்கள் போல

நீர்ப்பறவைகளின் கூடுகளுக்கு நடுவே

மிதக்கத் தொடங்குகிறது அவள் உடல்

எவரையும் அறிந்திராத ஆற்றில்

வெண்நுரை குமிழ்கள் அரும்பத் துவங்குகின்றன

கரையேறும் முன் அதுவரை

அவளிடம் மட்டுமே இருந்தவொன்றை

ஆற்றிடம் விட்டுச் செல்கிறாள்

நட்சத்திரமொன்று மின்மினிப்பூச்சியென

மூங்கில் புதர்களுக்குள் சுற்றியலையும் இரவில்

தன் ஆழத்தில் புதைந்து போய் விட்ட

அறியாமையின் இன்பங்களை மீட்கவியலாமல்

மெல்ல புலம்பியபடி நகர்கிறது

தனிமை உணர்ந்த ஆறு


No comments:

Post a Comment