மரகதப் புறாவின் கழுத்தென
நீலமாகிற இம்மாலைப் பொழுதில்
விரல் பற்றும் கிளியென
மனதைப் பற்றுகிறது ஒரு நினைவு.
இந்த முறை வலியில்லை
உருண்டு விழும் பகடைக்காய்களின்
முடிவு பற்றி எந்த பதட்டமுமில்லை.
நான் கன்னத்தோடு அழுத்திக் கொள்ளும்
தற்போது காலியான சங்கின்
வழவழப்பான குளுமை – இந்த
ஏகாந்தத்தைக் கிளர்ச்சியடையச் செய்கிறது.
சூதாட்ட விடுதிகள் நிறைந்த
நியான்கள் ஒளிரும் - கடற்புற
நகரத்துத் தெருக்கள் போல
மின்னத் துவங்குகிறது வானம்.
No comments:
Post a Comment