Monday, May 4, 2026

தேசாந்திரி

 அலைகள் செந்நிறமடையும் அந்தியில்

கால் நனைத்தபடி கூர்ந்து நோக்குகிறாய்

காற்றின் திசையில் ஒத்திசைந்து பறப்பவற்றை

அவை அடையப்போகும் தூரத்து கூடுகள்

ஏங்கத் தூண்டுவதாகச் சொல்கிறாய்

பல தேசங்கள் அலைந்து திரிந்த பின்னும்

இன்னும் உன் கண்களில் மிச்சமிருக்கிற

என்றோ நீங்கி வந்த பால்யத்தின் வீட்டிற்காக

கால்கள் பரப்பி நடக்கும் சிறுநண்டுகள்

மணல்வெளிக்குள் ஆழ நுழைந்து மறைகையில்

உருவாகும் சூன்யமான துளைகளில் பெருமூச்செறிகிறாய்

வெண்ணிறமாய் உடையும் நுரைக்குமிழ்கள்

உன்னை உற்சாகமாக்குமா என கவலையுறுகிறேன்

திடீரென வெகு தொலைவில் புள்ளியெனத் தோன்றி

பெரிதாகத் துவங்கும் பழங்கப்பலின் விம்மும் பாய்மரம்

மௌனமாக அழைப்பு விடுப்பதாகச் சொல்கிறாய் - மீண்டும்

மாய மான்கள் உலவும் புதிய கரைகளைத் தேடி..

முடிவிலி யாத்திரீகங்களால் வாழ்வை நெய்யும்

கட்டுப்பாடுகளின் தளைகளற்ற பெரும்பயணியே..!

உப்பு அரிக்கும் இப்பாறைகள் மீது

இன்னும் சற்று நேரம் அமர்ந்திரு

கரையான்கள் அரித்துத் தீர்க்கட்டும்

உன் நினைவுகளின் வீட்டை

                                                                                ( - சாம்ராஜிற்கு)


No comments:

Post a Comment