Monday, May 4, 2026

மொழிபெயர்ப்பு


​பருத்த மழைத்துளிகள்

தார்ச் சாலையில்

தவளைகளெனக் குதித்தோடும் இரவில்

பெருமழையின் பொழிவைச்

சிறு தூறலாக மட்டுமே அனுமதிக்க முடிகிற

கிளைகள் இறுகப் பின்னிய

மரத்தடியில் நாம் நின்றிருக்கிறோம்.

அடுத்த சந்திப்பின் நிச்சயமின்மை குறித்தோ

இந்தச் சந்திப்பின் அலைக்கழிப்புகள் பற்றியோ

நாம் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

கண்ணுக்குத் தெரியாத ஒரு ரகசியப் பேழையை

மோதி உடைத்து விடும் வேகத்தில்

வீசிக் கொண்டிருக்கும் காற்றினூடே

விடைபெறும் தருவாயில்

என் கைகளை இறுகப் பற்றி

உன் விரல்களால் நீ அவசரமாய் எழுதியதை

நான் என்னவென்று மொழிபெயர்க்க.... ?

No comments:

Post a Comment