சகல நிறங்களிலான மைப்புட்டிகளை
சேகரித்து அடுக்குகிறேன் என் மேசையில்
சிறைகளற்ற பேரன்பின் சித்திரம் தீட்ட
புட்டிகளில் செருகியிருக்கும் கறைபடாத இறகுகள்
காற்றில் படபடத்து சதா கேலி செய்கின்றன
சிறு புள்ளியும் இடப்பெறாத வெற்றுக் கித்தானை
கரும்பழுப்பென காத்திருப்பின் நிசப்தம்
நிரம்பியிருக்கும் என் அறையில் மைப்புட்டிகள்
எதிர் நோக்கியிருக்கும் ஆரவாரமான அன்பிற்காய்
அத்தனை நிறங்களும் கேலிச்சித்திரங்களுக்கே
உரித்தானவை என நான் அறியும் நாளில்
உள்நுழைகிறாய் புதிதாய் நடைபழகும்
சின்னஞ்சிறிய குழந்தையின் பாதங்களுடன்
பறத்தலை நினைவூட்டுகிறது உன் வருகையென
புட்டிகளிலிருந்து எழும்பி உயரே செல்கின்றன
சிறகுகளாய் மாறிய இறகுகள் எல்லாம்
உடைந்து விழும் சுவர்கற்களினூடே சிதறியிருக்கும்
நிறப்புட்டிகளின் கனத்த கண்ணாடித் துண்டுகள்
கைகள் ஏந்தி கண்கள் மூடி
வான் நோக்கி இறைஞ்சுகையில்
ஈரமாய் உள்ளங்கையைச் சேரும்
பருவத்தின் முதல் துளி மழையென
நிறமற்ற நீர்மை எளிய உன் அன்பு
No comments:
Post a Comment