இருள் கசியத் துவங்கும் வேளையில்
நுழைய நேர்ந்து விட்டது இன்று
யாருமற்ற புராதன மன்மதனின் கோவிலுக்குள்
சுடரும் விளக்கின் மஞ்சள் வெளிச்சத்தில்
மினுமினுக்கும் பசுங்கருப்பில் மிளிர்கிறது
காமன் அவனின் கற்சிலை
திமிறும் உடற்கட்டை ஒளித்து
மெல்லிய சிருங்காரம் பரவுகிறது
கள்ளத்தனம் நெளியும் இதழ்களில்
அவன் மார்பில் இன்று ஆறாவதாக
இன்னொரு அறிந்திராத மலரின் வாசம்
ஆகர்ஷிக்கும் உயரத்தில் முன்னெடுத்த
பாதத்தோடு - நெருங்குவது போல்
திடுக்கிட செய்கிறான்
காற்றில் மிதந்தபடி இருக்கும்
அன்னபட்சியின் வெண் தூவிகள்
மெல்ல வந்தடையும் தரையில்
நடக்கிறேன் வாசல் நோக்கி
வெளியேறும் முன் ஒருமுறை திரும்பிப் பார்க்கிறேன்
வசீகரமாய் அவன் கல் இமைகள்
ஒருமுறை மூடித் திறக்கின்றன
கையில் பிடித்த கரும்பு வில்லிலிருந்து வடிகின்றன
வற்றாத காமத்தின் தேன் துளிகள்
No comments:
Post a Comment