ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்
திரும்பிய நாளில்
என் தர்பார்
முற்றிலும் ஆளரவமற்று இருக்கிறது.
அமைச்சர்களும் ஆலோசகர்களும்
தற்காலிக வேலை தேடி
வெளியூர் போய் விட்டதாகத் தகவல்.
பாணர்கள் யாழ்கள் துடிகளோடு
அண்டை ராஜ்ஜியங்களுக்குச் சென்றாயிற்று.
மெல்ல நடந்து வெளியே வருகிறேன்.
என் கவிதைக் களிறு – வாசலில்
கரும்புக்கட்டை சுழற்றியபடி
கம்பீரமாக நிற்கிறது.
பாகனைக் காணோம்
அங்குசமும் அவசியமில்லை.
நிலமழுந்தத் தாவி - இலகுவாக
அதன் மீதேறி அமர்கிறேன்.
எனைக் கண்ட பரவசத்தில்
சிறு குழந்தையின் குதூகலத்தோடு
இராஜபாட்டையில் நடை போடுகிறது அது.
அவை நிரம்பும் ஓசை
கேட்கிறது பின்புறம்.
இது என் யானை
இது என் அம்பாரி.
No comments:
Post a Comment