Monday, May 4, 2026

புறநகர் தனிமை

பார்த்தீனிய செடிகளின் மேல் பலனின்றி

வெயிலடிக்கும் மதியப் பொழுதுகள் மட்டும்

சிரமமானவை அல்ல கடந்து போவதற்கு

வெறுமையான பகலையும் தனியான இரவையும்

ஒவ்வொரு மணித்துளியாக தாண்டி செல்பவர்

கடிகாரங்களற்ற உலகை கற்பனை செய்கிறார்

வராத அழைப்புகளுக்காக சதா அலைபேசி பற்றுபவர்

காய்ந்த உடைகளை மடிப்பதில் பெருங்கவனம் செலுத்துகிறார்

தனித்து நிற்கும் வேப்ப மரத்துப் பூக்களின் வாசம்

சாலையில் சரசரத்து அலையும் பாலித்தீன் பைகளில்

நிறைந்திருக்குமா என யோசித்து திகைக்கிறார்

சாய்வுநாற்காலியில் அமர்ந்து தினசரிகளின்

துணையோடு கொண்டு வர முயல்கிறார் - தன்

வீட்டிற்கு வெளிஉலகையும் அந்தியையும்

எப்போதாவது தாகம் தணிக்க நுழையும் - தற்போது

வழக்கொழிந்த வழிப்போக்கர்களையும் வரவேற்க

எதிர்நோக்கி மிக தயாராகவே இருக்கிறது  

அவ்வப்போது வெட்டுக்கிளிகள் மட்டும்

துள்ளித் திரியும் அவர் வீட்டின் முற்றம்


No comments:

Post a Comment