Monday, May 4, 2026

எப்பருவத்தையும் சேராத... எந்நிலத்தையும் சாராத...

குறுந்தளிர்கள் நடுங்கும்படி இடிமுழங்க

சன்னலுக்கு வெளியே சடாரெனப் பெய்யும்

இம்மலை நகரத்துக் கொடும் மழை - மீட்சிக்கான

எந்த ஆறுதலையும் அளிக்கவில்லை, தாரா...!

இப்பொழுது நீ தப்பிக்கும் உபாயங்களுடன்

வெகு தொலைவில் பயணித்துக் கொண்டிருக்கலாம்

அனற்காற்றை சுவாசிக்கும் நம் நகரத்தின்  

அமிலமென வெயில் வழியும் தெருக்களில்

இங்கிருந்தால் கனத்த ஈர சிறகுகளுடன்

நம்மைக் கடந்து செல்லும் பறவை நிச்சயம்

கூடடைந்திடுமா என கேட்டிருப்பாய்

ஒரு பார்வையிலோ கரம் பற்றுதலிலோ

எனக்கும் அப்பறவைக்கும் இக்குளிர் மாலைக்கான 

மொத்த கதகதப்பையும் கொடுத்திருக்கக் கூடும்

இதோ இப்பள்ளத்தாக்கு முழுதும் நிறக்காடென

மொய்த்துக் கிடக்கும் எல்லா பூக்களையும்

வசீகரம் இழக்கச் செய்கிறது - உன்

நம்பிக்கை இழக்காத வருடலில் மெல்ல அசையும்

இந்த வருடமும் பூக்காத உன் சின்னஞ்சிறிய

பூச்செடி பற்றிய மெல்லிய நினைவு 

தாரா....அன்பே . .

அன்றும் இன்றும் நாம் தேடிக் கொண்டிருப்பது

எப்பருவத்தையும் சேராத பெரும் பொழுதுகளையும்

எந்நிலத்தையும் சாராத சிறு மலர்களையும் தானே !

                          ( - ஹிமாச்சலில் தாராவிற்கு எழுதியது..)


No comments:

Post a Comment