சலனங்கள் மலிந்திடாத அதிகாலை
உன் நகருக்குள் பிரவேசிக்கிறேன்
குன்றின் கீழ் துஞ்சும் ஊர் - இன்று
ஏனோ ஒரு துறைமுகத்து நகரமென
சந்தேக உணர்வளிக்கிறது
சீற்றமான கடற்புறத்திலிருந்து
கனிவடைந்து வந்தது போல்
சல்லாத் துணியாக படபடக்கிறது காற்று
வயல்களிலிருந்தும் சிறு குட்டைகளிலிருந்தும்
எழும் நீரின் கவிச்சி வாசத்தில்
உப்பங்கழியின் சாரமும்
சேர்ந்திருப்பதாகப் படுகிறது
இன்னும் சற்று தொலைவில்
இந்த தார் சாலையின் முடிவில்
ஏதோவொரு படகு புறப்பட
ஆயத்தமாவது போலுமிருக்கிறது
மேலே பறக்கும் வெண்ணிற
கொக்குகளிடம் மட்டுமல்ல
காக்கைகளின் அலகுகளிலும் - நிச்சயம்
ஒரு மீன் இருக்கக் கூடும்
சாம்பல் நீல மேகங்களுடன் வானம்
அலை அலையாக விரிந்து புரள்கிறது
இன்னும் ஒரிரு நூற்றாண்டுகளில்
உன் நகருக்குப் புறத்தே
பெரும் சமுத்திரம் ஆர்பரிப்பதற்கான
சாத்தியக் கூறுகள் உறுதிபடத்
துவங்குகின்றன இந்த அதிகாலையில்
No comments:
Post a Comment