Tuesday, May 5, 2026

அமைதி


​நள்ளிரவுக் காற்று

கண்ணாடிச் சன்னலின்

திரைச்சீலை விலகுகிறது.

பனிக்கடியில் ஆழ்ந்து

உறங்குகிறது பெரும் மலை.

​கருக்கலில் காகங்கள்

கரைகின்றன – இடைவிடாது.

கோவில் வாயிலில்

கனத்த மணியின் நாவு அமைகிறது

சிறிதும் அசைவின்றி.

​வட்டமாக வானுயர்ந்து

இராட்சத மரங்கள் மூடி நிற்குமொரு வன நிலம்.

வேர்முடிச்சுகளின் தனிமையில் தியானிக்கிறது

நகர் புகுந்து விட்ட ஆதி குடியின்

கல் தெய்வம்.

​மா எரியின் நீல நீர்ப் பரப்பில்

சப்தமின்றிப் பெய்கிறது பருவ மழை

ஓட்டின் பச்சை தெரிந்து மறைய

அமிழ்ந்து மிதந்து நீந்துகிறது

சின்னஞ்சிறு ஆமை.

​குவளைத் தேநீர் மீது பறக்கும்

நீராவி – காற்றில் வரையும்

அரூப ஓவியத்தைப்

பார்வை விலக்காது நோக்கியவாறு

சமைந்திருக்கிறார் முதிய புத்த பிட்சு.

​எரிந்து அணைந்து கொண்டிருக்கும்

சுடலைச் சாம்பல் பொடி பறக்க

வந்து விழுகிறது ஒரு மழைத் துளி

அதன் பின்

மற்றுமொரு துளி.

​கனவில் சந்தித்தவனிடம் ஐயத்துடன்

இது கனவில்லையே என்கிறாள்.

இல்லை என மெலிதாகத் தலையசைத்துச்

சிகைக் கோதி – கண்கள் மூடி

உறங்கச் செய்கிறான் அவளை.

No comments:

Post a Comment