ஒரு சின்ன திடுக்கிடலோடு தான்
எதிர்கொள்ள வேண்டியிருந்தது நாம்
கருநீல அலைகள் நம் காலடியில் அதை
சிறு எள்ளலுடன் கொண்டு சேர்த்த போது
கனத்த ஓட்டிற்குக் கீழ் பிதுங்கிய
உப்பு நீரில் உப்பிய உடல்
பெருகும் இருளில் வெளிறிக் கொண்டிருந்தது
இனி எத்திசைக்கும் பயனிலாத
துடுப்புக் கால்கள் துவண்டு விட்டிருந்தன
அசைவற்ற அதன் கண்களுக்காய்
ஒரு துளி கண்ணீர் திரள்கையில்
என் கரங்களை அழுத்தமாகப் பற்றிக் கொள்கிறாய்
தன்னுடன் புன்னகையுடன் புகைப்படம்
எடுத்துக் கொள்கிறவர்களை பற்றிய
எந்தப் பிரக்ஞையுமற்று முற்றிலுமாய்
மரணித்து விட்டிருக்கிறது அது
எடை கூடிய எதுவாயினும் உயிரற்றதும்
கடல் கரை ஒதுக்கி விடும் என்கிறாய்
முன்னமே சொல்லியிருக்கலாம் நீ
சற்று முன்பு தான் நம்மைப் பற்றிய
நிறைவேறாத கனவுகளை
நடுக்கடலுக்கு அனுப்பி விட்டிருந்தேன்
உன் விரல்களுக்கிடையில் என் உள்ளங்கை
வியர்க்கத் துவங்குகிறது
இந்த அப்பாவிக் கடல் ஆமை போல்
நாளை கரை ஒதுங்காதிருக்கட்டும் அவை
No comments:
Post a Comment