காத்திருப்பின் கடுமை நிரம்பிய
புலரியின் பழுப்பு வெளியில்
எழுதத் துவங்கப் படுகிறது
நெறிகளற்ற ஒரு கடிதம்
சாம்பல் பின்னணியில் வார்த்தைகளை
அலகிலிருந்து தவற விட்டு
வானம் முழுக்க சிறகு விரிக்கின்றன
ஒலியெழுப்பா காக்கைகள்
சிமென்ட் பெஞ்சுகளின்
பனிக்கால இறுக்கத்தை
இளகச் செய்ய முற்படுகிறது
வலசையின் போது கடக்கும்
ஒரு பறவையின் இறகு
இன்னும் ஒரு நீண்ட குகைப்பாதையின்
அடர்ந்த இருளை கடந்து கொண்டிருக்கிறது
எனக்கான இரயில்
No comments:
Post a Comment