Monday, May 4, 2026

பழகாத கடலும் சாம்பல் வண்டுகளும்

 இந்த இரவில் எனக்கு 

அழுக்கான அலைகள் உறுமும்

அந்தப் பழகாத கடலைப் பற்றி மட்டுமே

எழுத முடிகிறது

கரித்துகள்களும் கழிவு எண்ணெயும் மிதக்கும்

பழைய துறைமுக நகரத்தின் கடல்

உயிர்ப்பற்ற சரக்குகள் ஏற்றும்

உடலில் துருவேறும் பழுப்பு நிற கப்பல்கள்

உறங்கிப் போகின்றன அக்கடலில்

கால்கள் நனைக்க முடியாத

அந்த கடலின் கரையில் நிற்பது போல்

அரவணைக்க முடியாத கருணையற்ற

இந்த இரவின் விளிம்பில் ஒதுங்குகிறேன்

கணினித் திரையின் மங்கிய வெளிச்சத்திற்கு

ஈர்க்கப்படும்

நிலத்தின் வெக்கை எழுப்பும் தூறல்களில்

உயிர்த்தெழும் சிறிய சாம்பல் வண்டுகள்

கரிய அலைகளுக்குள் மூழ்கத் தொடங்குகின்றன


No comments:

Post a Comment