கடலாடச் செல்கையில் நினைவிலிறுத்த சொல்கிறாய்
எனை அள்ளி அணைக்கும் அலைகள் எல்லாம்
உன் வெதுவெதுப்பான ஆலிங்கனங்கள் தாமென
என் காலடி நிலம் கரைந்து நான் நிலைகுலையும்
அபாயமிருப்பினும் - எந்தக் கேள்விகளுமற்று
ஒப்புக் கொடுக்கிறேன் என்னை முழுவதுமாக
அன்பின் ஆவேசத்தோடு புறப்பட்டு அமிழ்த்தி
ஆட்கொள்ளும் அலைகள் அடையாளமற்றுப்
போகும் அவலம் அறிந்தே அனுமதிக்கிறேன்
ஒவ்வொரு முறையும்
பேரலைகளுடன் விளையாடிக் கரையில்
பதிக்கும் சுவடுகளில் ஒன்று கூட
அதற்கான தடயங்களுடன் மிஞ்சுவதில்லை எனக்கு
உடலெங்கும் உவர்க்கும் நீர் வழிய செயலற்று நிற்கிறேன்
கைநிறைய கடல் ஒதுக்கும் வெற்றுக் கிளிஞ்சல்களுடன்
நினைவில் மட்டும் சேகரிப்பதைத் தவிர
வேறு என்ன செய்ய இயலும்?
அள்ளிச் செல்ல முடியாத அலைகளை
No comments:
Post a Comment